சில விஷயங்களைக் கண்களால் பார்த்தால் கூட நம்ப முடியாது. அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் நேற்று குஜராத்தில் நடைபெற்றிருக்கிறது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஃபேஷன் மற்றும் நகை வடிவமைப்பு நிறுவனம் சார்பில் பேஷன் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 8 பார்வையற்ற மாடல்கள் கலந்துகொண்டனர். மேடையில் இவர்கள் கம்பீரமாகவும், ஸ்டைலாகவும் ரேம்ப் வாக் வந்தது பார்ப்போரைக் கண்கவரச் செய்தது.
முதலில் சிறிது தூரம் இவர்களைக் கைப்பிடித்து ஒருவர் அழைத்து வர, பின்னர் தனியாக நடந்து வந்து பார்வையாளர்களை நோக்கிக் கையசைத்தனர்.
பார்வையாளர்களின் கரவொலிக்கு மத்தியில், நடந்து வந்த இவர்கள் பழங்கால மேற்கத்திய உடைகளை அணிந்திருந்தனர்.
இந்த பேஷன் காட்சிக்காக எவ்வளவு பயிற்சி எடுத்திருப்பார்கள் என்பது இவர்களின் இயல்பான நடை மூலம் தெரியவருகிறது.
இதுகுறித்து இந்த விழாவில் கலந்துகொண்ட ஜான்வி கூறுகையில், “இந்த விழாவுக்காக இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் பயிற்சி எடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மாடல் இஷா கூறுகையில், “பார்வையாளர்களின் கைதட்டலைக் கேட்ட போது, நாங்கள் சிறப்பான ஒன்றைச் செய்துள்ளோம் என்பதை உணர்ந்தேன்” என்றார்.
நிகழ்ச்சி அமைப்பாளரான போஸ்கி நத்வானி கூறுகையில், “இந்த பெண்கள் மிகவும் கடினமாகப் பயிற்சி எடுத்துள்ளார்கள். முதலில் இவர்களுக்கு பயிற்சி எடுக்கக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் விரைவில் கற்றுக்கொண்டார்கள்” எனக் கூறினார்.
தற்போது இந்த பெண்களின் ரேம்ப் வாக் செய்த காணொளிதான் ட்விட்டரில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பிரியா