‘மாண்டஸ் புயலின் போது வெளியே யாரும் செல்ல வேண்டாம்’ என வித்தியாசமான முறையில் அறிவுறுத்திய விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ் அதிகாரியின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியது. தேவையில்லாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்பதை ஐஏஎஸ் அதிகாரியான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயலாளர் விஜயகார்த்திகேயன் வித்தியாசமாக கூறியிருக்கிறார்.
அவர் நேற்று இரவு 12.27 மணியளவில் தனது ட்விட்டர் பதிவில், “ஈசிஆர் வழியாக லாங் டிரைவ் செல்ல மாமாக்குட்டி கூப்பிட்டாலும் வீட்டை விட்டு வெளியே போகாமல் பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்குப் பலர், ”எல்லா சிங்கிள்ஸும் இப்ப சந்தோஷமா இருப்பாங்க, ஒரு நாளாவது ஈசிஆர் பக்கம் நிம்மதியா போகலாம்”, ”இது ஒரு சிறப்பான பதிவு சார்” என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான லவ் டுடே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம்பெறும் மாமாக்குட்டி, கன்னுக்குட்டி ஆகிய செல்ல பெயர்கள் தான் காதலர்கள் மத்தியில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில்தான், விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ் மாமாக்குட்டி என்ற வார்த்தையைப் பயன்படுத்தி ட்வீட் செய்திருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
“விடிய, விடிய கலெக்டர்களிடம் பேசினேன்” – ஆய்வுக்கு பின் முதல்வர் பேட்டி
முதல்வர் போனை எடுக்காத கலெக்டர்: காரணம் என்ன?