அஜித் நடிப்பில் வெளியான ’மங்காத்தா’ திரைப்படம் ரிலீசாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆவதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், அப்படத்தின் சில புகைப்படங்களையும் இயக்குநர் வெங்கட் பிரபு இன்று (ஆகஸ்ட் 31) பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

’சரோஜா’, ’சென்னை 28’ ஆகிய படங்களை இயக்கியிருந்த இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு தனது 50வது படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார் நடிகர் அஜித்.
’மங்காத்தா’ என பெயரிடப்பட்ட அந்தப் படத்தில், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா , வைபவ் ரெட்டி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தை தயாநிதி அழகிரியின் ‘கிளவுட் நைன் மூவிஸ்’ தயாரித்திருந்தது.
இந்தப் படம், அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெரிதும் திருப்திப்படுத்தி பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றிருந்தது.

காரணம், அஜித் திரைப்படத்துக்கான எதிர்பார்ப்புகளை கொஞ்சம்கூட பிசிறு இல்லாமல், இயக்குநர் வெங்கட் பிரபு அதில் நிறைவேற்றியிருந்தார்.
ஓர் இயக்குநராக சரியான விதத்தில் புதுமையான கதையை தந்ததுடன், திரைக்கதையில் பரபரப்பான திருப்பங்களையும் வைத்திருந்தார்.
தவிர, யுவன் சங்கர் ராஜாவின் இசையும், பாடல்களும் படத்துக்கு வலுவூட்டின. அப்படத்திற்காக யுவன் போட்ட பிஜிஎம் இன்றளவும் மாஸ் குறையாமல் உள்ளது.

அதனாலேயே மங்காத்தா பெரிய அளவில் வெற்றிபெற்றதுடன், இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் நடிகர் அஜித்துக்கும் இந்தப் படம் நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது.
முக்கியமாக, இந்தப் படம், இயக்குநர் வெங்கட் பிரபுவின் திரை வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து, ’மங்காத்தா 2’ படம் விரைவில் உருவாகும் என்று 2022 மே 2ம் தேதி இயக்குநர் வெங்கட்பிரபு அறிவித்திருந்தார்.
தவிர, ‘முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை சிறப்பாக வந்துள்ளது.
‘மங்காத்தா 2’ கதையை அஜித்திடம் தெரிவித்துவிட்டேன்’ என்று அவர் பேசியிருந்தது அஜித் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது.

’மங்காத்தா 2’விற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள், அதேநேரத்தில் ‘மங்காத்தா’ ரிலீஸாகி இன்றுடன் (ஆகஸ்ட் 31) 11 ஆண்டுகள் ஆவதையும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் #11YearsOfCultMANKATHA என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
மறுபுறம் இப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 31) மங்காத்தாவின் சில போஸ்டர்களைப் பகிர்ந்து, “தன்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
ஜெ.பிரகாஷ்