தோனியின் பைக் காதல்: ஆச்சரியத்தில் உறைந்த வெங்கடேஷ் பிரசாத்

Published On:

| By christopher

dhoni craziness on bikes

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

தனது 42 வயதிலும் கிரிக்கெட்டில் அவர் காட்டும் ஈடுபாடு பலரையும் வியக்க வைக்கும். அதே போன்று வேறு சில விஷயங்கள் மீது தோனிக்கு ஆர்வம் அதிகம்.

குறிப்பாக விவசாயத்தின் மீதும், பைக்குகள் மீதும் அவர் கொண்டுள்ள ஆர்வம் குறித்து அவ்வப்போது வெளியாகும் வீடியோக்கள் வைரலாகும். இந்நிலையில் தான் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் அவரது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ, பைக்குகள் மீதான தோனியின் காதலை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

வெங்கடேஷ் பிரசாத் மற்றும் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சுனில் ஜோஷி ஆகியோர் நேற்று (ஜூலை 18) ராஞ்சியில் உள்ள தோனியின்  பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அவர்களை தான் அமைத்துள்ள பிரம்மாண்டமான பைக் கேரேஜுக்கு அழைத்து சென்றுள்ளார் தோனி.

ஒரு கட்டிடத்தின் கீழ் எண்ணற்ற பைக் மற்றும் கார்கள் நிற்பதை கண்ட வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி இருவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

இதனை வீடியோவாக பதிவு செய்த தோனியின் மனைவி சாக்‌ஷி, ”எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “ஆச்சரியம்! ராஞ்சிக்கு நான்காவது முறையாக வருகிறோம். ஆனால் இந்த இடத்தை பார்க்கும்போது ஒருவர் பைக்குகளின் மீது எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது. இந்த இடம் ஒரு பைக் ஷோ ரூம் போல் இருக்கிறது” என்று இருவரும் தெரிவித்தனர்.

பைக் சேகரிப்பில் பெரும் ஈடுபாடு கொண்ட தோனியிடம் பல்வேறு அரிய பைக்குகள் உள்ளன. இதில் எக்ஸ்132 ஹெல்கேட் (x132 hellcat) விலையுயர்ந்த பைக்கை தென்கிழக்கு ஆசியாவில் வைத்துள்ள வெகு சில உரிமையாளர்களில் தோனியும் ஒருவர்.

உலகளவில் இந்த பைக் ஆனது பிராட் பிட், டாம் குரூஸ், டேவிட் பெக்காம் மற்றும் ரியான் ரெனால்ட்ஸ் போன்ற சில பிரபலங்களிடம் மட்டுமே உள்ளது.

மேலும், ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய், கவாஸாகி நின்ஜா எச்2, டுகாட்டி 1098, யமஹா ஆர்டி350 மற்றும் சுஸுகி ஹயபுசா, யமஹா ராஜ்டூட், யமஹா ஆர்எக்ஸ் 135, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் டிவிஎஸ் ரோனின் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பைக்குகள் உள்ளன.

பைக் மட்டுமின்றி 1980ஆம் ஆண்டைச் சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் சிவர் வ்ரைத் II  உள்பட பல்வேறு பழங்கால கார்களையும் தோனி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தான் தற்போது வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டுள்ள தோனியின் பைக் கேரஜ் வீடியோ சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆட்சியர் அலுவலகத்துக்கு பாடையுடன் வந்த கிராம மக்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share