எளிதாகக் கிடைக்கும் பாரம்பரிய பொருட்களை வைத்து, சுலபமாக சமைத்துவிடக்கூடிய உணவுகள் நம் சுவை அரும்புகளை நிச்சயம் மலரச் செய்யும். அதற்கு சிறந்த உதாரணம் இந்த வாழையிலை மடக்கு. இது வாழையிலையுடன் சேர்த்து வெந்து வருவதால் வாழையிலையின் அனைத்து நற்குணங்கள், பயன்கள் உடலில் சேரும். நார்ச்சத்து மிகுந்தது. உடல் சூட்டைத் தணிக்கும்.
என்ன தேவை?
பச்சரிசி மாவு – ஒரு கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – 2 சிட்டிகை
தேங்காய்த்துருவல் – ஒரு கப்
நாட்டுச்சர்க்கரை – அரை கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
வாழையிலை – தேவையான அளவு
நல்லெண்ணெய் – சிறிதளவு
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் 2 சிட்டிகை உப்பு சேர்த்து, 3 சொட்டு நல்லெண்ணெய்விட்டு கொதிக்கும்போது அரிசி மாவைக் கொட்டி நன்கு கலந்து இறக்கிவைக்கவும். சூடு சிறிது ஆறியதும் நன்றாகப் பிசைந்து ஒரு ஈரத்துணி போட்டு மூடிவைக்கவும். பிறகு ஒரு கடாயில் நெய்விட்டு, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், நாட்டுச்சர்க்கரை கலந்து வதக்கி இறக்கி ஆறவிடவும்.
பிறகு ஒரு வாழையிலையை, சிறிய சிறிய துண்டு இலைகளாகச் செய்து அதில் ஓர் உருண்டை மாவை வட்ட வடிவாகத் தட்டி அதில் இந்த தேங்காய் ஸ்டஃப் வைத்து இலையை மடக்கிவைக்கவும். இப்படியாக எல்லாவற்றையும் செய்து ஓர் இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து 10 நிமிடங்கள் கழித்து எடுத்தால் அருமையான கமகமக்கும் ருசிமிக்க வாழை இலை மடக்கு தயார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நாட்டு ஊத்தப்பம்
சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு ஏற்றது பெரிய வெங்காயமா? சின்ன வெங்காயமா?
தப்ப முயன்ற ரவுடி ஜம்புகேஸ்வரன் சுட்டு பிடிப்பு!
இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதா? : காவல்துறை விளக்கம்!