நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் ஒரே மாதத்தில் தொடர்ந்து 4வது முறையாக விபத்தில் சிக்கியுள்ளது.
75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அடுத்த ஆண்டிற்குள் 75வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு பகுதிக்கும் வந்தே பாரத் ரயில் சேவையையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
வந்தே பாரத் ரயில் அதிவேக பயணத்திற்காகச் சிறப்புப் பெற்றது. ஆனால் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகிறது.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி குஜராத் – மகாராஷ்டிரா இடையே இயக்கப்பட்ட ரயிலில் எருமை மாடுகள் மோதியதில் 4மாடுகள் உயிரிழந்தன. ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டது.

அக்டோபர் 7ஆம் தேதி அதே ரயிலில் பசுமாடு ஒன்று மோதியதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. பசுமாடு மோதி ரயில் சேதமடைந்ததால் பசுமாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அக்டோபர் 8ஆம் தேதி காலை 6 மணிக்கு டெல்லியிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் சக்கரம் திடீரென ‘ஜாம்’ ஆனது. இதனால் பயணிகள் 5மணி நேரம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 29) மும்பை – காந்திநகர் (குஜராத்) வரை இயக்கப்படும் வந்தே பாரத் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
காலை 8.15மணியளவில் அதுல் ரயில்வே நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் ஒரு பசுமாடு ஒன்று காயமடைந்துள்ளதாகத் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
உடனடியாக அதிகாரிகள் வந்து சேதமடைந்த பகுதியை சரிசெய்தனர். இதனால் ரயில் மீண்டும் புறப்பட்டுச் செல்வதற்கு 15நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.
சென்னை – மைசூர் வரை இயங்கும் 5வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் நவம்ப்ர் 11ஆம் தேதி துவங்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
“சைதை சாதிக் மன்னிப்பை ஏற்க முடியாது” : குஷ்பு காட்டம்!
மீனவர்களைச் சிறை பிடித்த இலங்கை கடற்படை: ராமேஸ்வரத்தில் போராட்டம்!