Vande Bharat train Rs. 6000 loss

வந்தே பாரத் ரயில்: சிறுநீர் கழிக்க ஏறியவருக்கு ரூ. 6000 இழப்பு!

இந்தியா டிரெண்டிங்

ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க ஏறிய  நபருக்கு, ரூ.6,000 இழப்பு  ஏற்பட்ட சம்பவம் மத்தியபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

ஹைதராபாத் நகரைச் சேர்ந்த அப்துல் காதர் கடந்த ஜூலை 15 ஆம் தேதி தன் மனைவி மற்றும் தனது 8 வயது மகனுடன் தனது சொந்த ஊரான சிங்ராலிக்கு செல்வதற்காக மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது, அவருக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படவும், எதிரே நின்றிருந்த இந்தூருக்குச் செல்லும் வந்தே பாரத் ரயிலில் ஏறி, கழிவறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

கழிவறையை விட்டு வெளியே வந்த அவருக்கு அப்போது தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவர் சிறுநீர் கழிப்பதற்காக ஏறிய வந்தே பாரத் ரயிலின் கதவுகள் மூடப்பட்டு அவர் இருந்த இரயில் நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது.

பின்னர், ரயில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனிடையே அப்துல் காதரை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போபால் ரயில் நிலையத்தில் தேட,  டிக்கெட் பரிசோதகர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒரு வழியாக  அடுத்த நிறுத்தமான உஜ்ஜைனியில் ரயில் நிறுத்தப்பட்டது. அதே நேரம் டிக்கெட் இல்லாம் பயணித்த காரணத்தால் அவருக்கு 1,020 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Vande Bharat train Rs. 6000 loss

இதனிடையே அப்துல் காதர் வந்தே பாரத் ரயிலில் சிக்கிக் கொண்டதை கண்டு செய்வதறியமால் அவரது மனைவி மற்றும் 8 வயது மகன் திகைத்து போய் ரயில் நிலையத்திலேயே காத்திருக்க,

மறுபுறம் உஜ்ஜைனி ரயில் நிலையத்தில் இருந்து 750 ரூபாய் டிக்கெட் பெற்று பேருந்து மூலம் போபால் ரயில் நிலையத்திற்கு அப்துல் காதர் விரைந்தார்.

அவர் வருவதற்குள் இரவு 8.55 மணிக்கு புறப்பட வேண்டிய அவரது சொந்த ஊரான சிங்ராலிக்கு செல்லும் ரயிலும் புறப்பட்டுச் சென்றது.

இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் கடும் அவஸ்தைக்கு உள்ளானது.

வந்தே பாரத் ரயிலில் அபராதத் தொகை  1, 020 ரூபாய், உஜ்ஜைனியில் இருந்து போபால் வர 750 ரூபாய், தவறவிட்ட ரயிலுக்கு முன்பதிவு கட்டணம் 4 ஆயிரம் ரூபாய் என ஒட்டுமொத்தமாக 6 ஆயிரம் ரூபாய் வரை இழந்த அப்துல் காதார், வந்தே பாரத் ரயிலில் அவசரகால அமைப்பு (emergency system ) இல்லாததால் தனது குடும்பம் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக குற்றம்சாட்டினார்.

அதே நேரம், அப்துல் காதரின் இந்த குற்றச்சாட்டிற்கு போபால் ரயில்வே கோட்டத்தின் பிஆர்ஓ சுபேதார் சிங் பதிலளித்துள்ளார்.

அதில், வந்தே பாரத் ரயில் தொடங்கும் முன் அறிவிப்பு வெளியிடப்படும். கதவுகள் எந்த திசையில் திறக்கப்படும் என்றும் கதவுகள் பூட்டப்படுகின்றன என்ற அறிவிப்பும் வரும்.

விபத்துகளைத் தடுக்கவும், பயணிகளின் நலனை உறுதி செய்யவும் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயிலை உடனடியாக நிறுத்த முடியாது உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு பெற்ற பின்னரே ரயிலை நிறுத்த முடியும் என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!

+1
0
+1
10
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *