லூடோ சூதாட்டத்தில் ஓர் இளம்பெண் தன்னையே இழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூதாட்டம் என்பது பழங்காலத்திலிருந்தே விளையாடப்பட்டு வருகிறது. மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில்கூட தர்மன் சூதாடி அனைத்தையும் இழப்பார்.
ஏன், தன் மனைவி பாஞ்சாலியையே சூதாட்டத்தில் இழப்பார். இதுதவிர, உலக வரலாறுகளில் பல தலைவர்கள் சூதாடி பொருளையும் வாழ்வையும் இழந்துள்ளனர்.
இந்த சூதாட்டம், தற்போது ஆன்லைன் வடிவில் பல குடும்பங்களையும் அழித்து வருகிறது. இதையடுத்துத்தான் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை நிரந்தரமாக நீக்குவதற்கு அவசர சட்டம் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.

லூடோ சூதாட்டம்
இந்த நிலையில்தான், லூடோ என்ற சூதாட்டத்தில் தன்னையே இழந்துள்ளார் ஓர் இளம்பெண். லூடோ என்பது பகடைகளை உருட்டியும், காய்களை நகர்த்தியும் அந்தந்த நிறத்தின் வீட்டை அடையும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு விளையாட்டு ஆகும்.
இதை எதிராளி தடுப்பதும், ஆட்டத்தின் வேகத்தைக் குறைக்க மற்றவர்களின் துண்டுகளை வெட்டுவதும் லூடோவின் எதிர்விளையாட்டாகும். என்றாலும், இதுவும் ஒரு சூதாட்டமே ஆகும். தற்போது ஆன்லைன் ரம்மி போல், இந்த சூதாட்டமும் தற்போது மொபைல் போன்களில் விளையாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்திலுள்ள தேவ்கலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணு. இவர் தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது கணவர் உமேஷ் ஜெய்ப்பூரில் வேலை செய்து வருகிறார்.
வீட்டுச் செலவுக்காக அவர் அனுப்பிய பணத்தை வைத்து, அவரது மனைவி லூடோ விளையாடி செலவு செய்துள்ளார். அதுவும், தனது வீட்டின் உரிமையாளருடன் லூடோ விளையாடி வந்துள்ளார்.
தோற்ற இளம்பெண்
ஒருகட்டத்தில், கணவர் அனுப்பிய பணம் அனைத்தும் கரைந்துபோக, மகாபாரதத்தில் இறுதியாக தர்மர், பாஞ்சாலியை வைத்து சூது விளையாடியதைப் போன்று, இந்தப் பெண் தன்னையே வைத்து லூடோ விளையாடியுள்ளார்.
ஆனால், அதிலும் அந்தப் பெண் தோற்றுவிட்டார். இதனால், அவர் வீட்டு உரிமையாளருடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதுதொடர்பாக ரேணுவின் கணவர் அளித்துள்ள புகாரில், ’எனது மனைவி லூடோவில் தோற்றதால், எதிராக விளையாடியவருடன் சென்றுவிட்டார். தயவு செய்து எனது மனைவியை மீட்டுத் தாருங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரி சுபோத் கவுதம், ’நாங்கள் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரை தொடர்புகொள்ள முயன்று வருகிறோம். அவரைத் தொடர்பு கொண்டதும் விசாரணைகளை ஆரம்பிப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.
பரபரப்பு சம்பவங்கள்
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இந்தியாவில் மனைவி ஒருவர் தொடர்ச்சியாக கணவனை லூடோவில் தோற்கடித்ததால் இரவு முழுக்க அடித்து கணவர் சித்திரவதை செய்த சம்பவமும்,
லூடோ விளையாடியபோது தொந்தரவு செய்தவரை நண்பரே சுட்டுக்கொன்ற சம்பவமும், லூடோ விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாததால் தனது அக்கா மீது காவல் நிலையத்தில் சிறுவன் புகார் அளித்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
மாண்டஸ் புயல் எச்சரிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
முதல்வர் இல்லம்: வெடித்த போலீஸாரின் துப்பாக்கி!