வேத மரபுகளை காப்பாற்றும் வகையில் காதலர் தினத்தை பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புத்தாண்டு கடந்து பிப்ரவரி மாதம் பிறந்தாலே காதலர்களுக்கு கொண்டாட்டம் தான். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப் படுகிறது. அந்நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது காதலை வெளிப்படுத்தி மகிழ்வது வழக்கம்.
காதலர் தினத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் ஒரு வித்தியாசமான வேண்டுகோளை இன்று (பிப்ரவரி 8) விடுத்துள்ளது.
“தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், பிப்ரவரி 14-ஆம் தேதியை பசு அரவணைப்பு தினமாக அனைத்து பசுப் பிரியர்களும் கொண்டாடலாம்” என்று கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறையின் கீழ் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு. கால்நடைகளின் செல்வம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பிரதிபலிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
தாய் போன்ற உள்ளத்துடன் அதன் ஊட்டமளிக்கும் தன்மையால் இது ‘காமதேனு’ மற்றும் ‘கௌமாதா’ என்று அழைக்கப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதகுலத்திற்கு செல்வத்தை வழங்கும் பசுக்களை கட்டிப்பிடிப்பது உணர்ச்சியை பெருக்கும். தனிநபருக்கும் சரி, சமூகத்திற்கும் சரி மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
மேற்கத்திய கலாச்சாரத்தின் முன்னேற்றம் காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருக்கிறது. மேற்கத்திய நாகரிகத்தின் திகைப்பில் நமது உடல் வேத கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கிட்டத்தட்ட மறந்துவிட்டது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிக்கைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.
முன்னதாக காதலர் தினத்தன்று கடற்கரைகளில், பூங்காக்களில் இருக்கும் காதலர்கள் முன் தாலியுடன் சென்று கட்டாய திருமணத்தை வலியுறுத்தி சில இந்துத்துவ அமைப்புகள் தங்களது எதிர்ப்பை காட்டி வந்தன.
இந்நிலையில் அதன் நவீன வடிவமாக பசுவை கட்டிப்பிடிக்க தற்போது மத்திய அரசு கூறியுள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
சீட்டுகட்டாய் சரிந்த கட்டிடங்கள் : தவறை திருத்திக் கொள்ளுமா துருக்கி?
இரட்டைக் கன்றுகளை ஈன்ற நாட்டுப் பசு: அரியலூரில் அரிய நிகழ்வு!