Understand that pimples are not the problem

பியூட்டி டிப்ஸ்: பருக்கள் என்பது பிரச்சினையல்ல… புரிந்துகொள்ளுங்கள்!

டிரெண்டிங்

பருவ வயதை எட்டியவுடன் நிகழும் பல மாற்றங்களில் ஒன்று, பருக்கள் தோன்றுவது. பருக்கள் தோன்றுவது என்பது, பாலின பேதமற்ற ஒரு சாதாரண நிகழ்வுதான் என்றாலும், ஆண்களில் பருக்கள் சற்று அதிகமாகவும் ஆழமாகவும் வெளிப்படுகின்றன.

அதேசமயம் பருவப்பெண்கள் பலருக்கு, மாதவிடாய் வர இருப்பதை கட்டியம் கூறுவதைப் போல பருக்கள் வெளிப்படுகின்றன.. சிலருக்கு ஏற்கெனவே இருக்கும் பருக்கள் மாதவிடாயின்போது இன்னும் பெரிதாகி, சிவந்துபோவதும், சீழ் கோப்பதும் நிகழ்கிறது.

பரு என்பது நமது சருமத்தில் இயல்பாக உருவாகும் சிறியதொரு பாதிப்புதான் என்றாலும், பருவகாலத்தில் மட்டும் ஏன் பருக்கள் அதிகம் காணப்படுகின்றன என்றால் ஹார்மோன்கள் தான் காரணம் என்கிறது அறிவியல்.

பொதுவாக, இந்த எண்ணெய் சுரப்பிகள் ஹார்மோன்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.. அதிலும் குறிப்பாக ஆண்ட்ரோஜென் ஹார்மோன்களான, டெஸ்டோஸ்டிரோன், டி.ஹெச்.டி, டி.ஹெச்.ஈ.ஏ. ஆகியன ஆண், பெண் இருபாலரிலும் சீபம் சுரப்பதையும் வெளியேறுவதையும் கட்டுப்படுத்துகின்றன.

பருவமடையும்போது ஆண்களுக்கு அதிகம் சுரக்கும் இந்த ஆண்ட்ரோஜென் ஹார்மோன்களால்தான் பருக்கள் உருவாகின்றன. பொதுவாக, பெண்களில் ஆண்ட்ரோஜென்கள் அளவில் குறைவாக, அட்ரீனல் சுரப்பிகளில் சுரந்தாலும், அவை பெண்களையும் பருவ வயதில் பருக்களாக பாதிக்கின்றன.

பருவகாலத்தில் பருக்கள் வருவது இயல்புதான்… அப்படி வரும்போது, பருக்களுக்கு எளிமையான தீர்வுகள் இதோ…

முகத்தை வெதுவெதுப்பான நீரில் சாதாரண சோப் அல்லது கிளென்சர் கொண்டு, ஒருநாளில் குறைந்தது மூன்று முறையாவது கழுவுதல், அடைப்பு ஏற்படாமல் உதவும். கழுவிய பின், நீரேற்றத்தைக் கூட்டும்  மாய்ஸ்ச்சரைசர் க்ரீம் அல்லது லோஷன்களைப் பயன்படுத்தலாம்.

பொதுவான பரிந்துரையான கற்றாழை, மஞ்சள், சந்தனம், வேப்பிலை ஆகியவற்றை உபயோகித்தல், முகத்தின் எண்ணெய் பிசுபிசுப்பைக் குறைக்க உதவும் என்பதால், அலர்ஜி இல்லாதவர்கள் இவற்றைப் பயன்படுத்தலாம்.

இறுக்கமில்லாத தளர்வான பருத்தி ஆடைகள் உடுத்துவது வியர்வை மற்றும் எண்ணெய் அதிகம் தங்காமல் உதவும்.

கேரட், பீட்ரூட், வெள்ளரி, மாம்பழம், வாழைப்பழம் என வைட்டமின் ஏ, சி மற்றும் துத்தநாகச் சத்துகள்  நிறைந்த உணவுவகைகளை அதிகம் உட்கொள்வதும், அத்துடன் கொழுப்பு உணவுகளையும், வறுத்த மற்றும் மசாலா நிறைந்த உணவு வகைகளைத் தவிர்ப்பதும் இதில் நன்கு உதவும்..

சருமத்தில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க, குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீரைப் பருகுவது அவசியம். இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் பருகுவதும் பருக்களை குறைக்க உதவும்.

உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதால் வெளியேறும் வியர்வை சரும அழுக்குகளைக் கழுவுகிறது என்றால், குறைந்தது 8-9 மணிநேர உறக்கம் சருமத்தின் செல்களை புதுப்பிக்கச் செய்கிறது.

ஆக, இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறை, பருக்களையும் நிவர்த்தி செய்கிறது. இதில் மன அழுத்தத்தைக் குறைக்கும் அனைத்து வழிமுறைகளும் பருக்கள் குறைவதில் பெரும் பங்கு வகிக்கின்றன..

அடுத்து முக்கியமாக, பருக்களை விரல்களால், நகங்களால் கிள்ளுவதும், ஊசிகொண்டு குத்துவதும் பருக்களை குணப்படுத்தாமல், முகத்தில் நிரந்தரத் தழும்புகளை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை..

விளம்பரங்களிலும் கடைகளிலும் பரிந்துரைக்கப்படும் க்ரீம் அல்லது ஆயின்ட்மென்ட்டுகளை மருத்துவரின் பரிந்துரையின்றி உபயோகிப்பதைத் தவிர்ப்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

மேக்கப் உபயோகிக்க வேண்டிய தருணங்களில், ‘நான்-காமிடோஜெனிக்’ (non-comedogenic) எனப்படும் எண்ணெய் பிசுக்கற்ற, ரசாயனங்களற்ற எளிய அழகு சாதனப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த எளிய பரிந்துரைகள் பயனளிக்காதபோது, சரும நோய் மருத்துவரிடம் ஆலோசனைகள் பெற்று தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது.

ஆக… பருவத்தில் வருவது தான் பரு.. அது வராமல் தவிர்க்க ஒருநாள் தீர்வு போல எதுவும் இல்லை. என்றாலும், சில எளிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே, இந்த சின்னஞ்சிறு பருக்களால் ஏற்படும் விளைவுகளில் இருந்து விடுபடலாம் என்பதே உண்மை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : கிரிஸ்பி கார்ன் ஃப்ரை

சும்மா கிழி…. அப்டேட் குமாரு

செங்கோலை அகற்ற வேண்டுமா? : கொந்தளித்த யோகி ஆதித்யநாத்… தமிழில் பதில்!

கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 லட்சம் கோடி கடன்: பெரியகருப்பன் அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *