தமிழக சட்டப்பேரவையில் இன்று (அக்டோபர் 18) தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் மு.கருணாநிதி மற்றும் மு.வரதராசனார் ஆகியோரது தெளிவுரையுடன் கூடிய இரு திருக்குறள்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் தொடர்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு வழியில்லை!
இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் அளித்த விசாரணை அறிக்கை தமிழ்நாடு சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இறக்கவில்லை என்றும் டிசம்பர் 4ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கே அவர் இறந்துவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், ’சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் ஆணையம் வர இயலாது. ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, டாக்டர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடனேயே டாக்டர்.சோமன் அறிவுறுத்திய பிறகும், உயிரை காக்கும் முக்கியமான ஆஞ்சியோ சிகிச்சையை செய்யவில்லை என்றும், அதனை செய்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என்றும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

திருக்குறளுடன் அறிக்கை நிறைவு!
இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் முன்வைக்கப்பட்ட 561 பக்கங்கள் கொண்ட அறிக்கையின் இறுதியில் கலைஞர் கருணாநிதி மற்றும் டாக்டர் மு.வரதராசன் தெளிவுரையுடன் கூடிய இரு திருக்குறள்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாவதாக,
‛‛நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”
என்ற அதிகாரம் 95ல் மருந்து என்ற தலைப்பில் உள்ள 948வது திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
அதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதியிருந்த, ‘நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்’ என்ற தெளிவுரை இடம்பெற்றுள்ளது.
இரண்டாவதாக,
‛‛காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு”
என்ற அதிகாரம் 50ல் இடனறிதல் என்ற தலைப்பில் உள்ள 500வது திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
அதற்கு டாக்டர் மு.வரதராசன் எழுதிய, ‛வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும் கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்’ என்ற விளக்கமும் இடம்பெற்றுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
‘அம்மாவ பிடிச்சு ஜெயில போடுங்க’: 3 வயது சிறுவனின் பரபரப்பு புகார்!
டி20 உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் சாதனை… யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்?