குஜராத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன இரண்டு பச்சிளம்குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக அடுத்தடுத்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் தஹோத் மாவட்டம் கர்படா தாலுகா அருகே பே கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோக்லா ஹதிலா என்ற விவசாயி. இவர் நேற்று (ஆகஸ்டு 4) காலை வழக்கம்போல தனது வயலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாழுங்கிணற்றில் இருந்து ஒரு பச்சிளம்குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அதிர்ந்து போன ஜோக்லா உடனடியாக கிணற்றருகே சென்று பார்த்தபோது, அதற்குள் பிறந்து சில மணி நேரங்களே ஆன சிசுவை கண்டு சத்தமிட்டுள்ளார்.
அதனை கேட்டு ஜோக்லா இருந்த கிணற்றுக்கு அருகே வந்த கிராமத்தினர் திடுக்கிட்டனர். ஆனால் கிணற்றுக்குள் கதறியபடி இருந்த குழந்தையை பத்திரமாகவும் விரைவாகவும் மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து அவசர ஆம்புலன்சில் குழந்தையை ஏற்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பச்சிளங்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் பச்சிளம் குழந்தையை கிணற்றுக்குள் வீசிச் சென்ற பெற்றோர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மண்ணில் இருந்து வந்த அழுகுரல்!
இதற்கிடையே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளங்குழந்தை குஜராத்தின் மற்றொரு இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சபர்கந்தா மாவட்டத்தில் கம்போய் கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திரசிங் தாபி. இவர் நேற்று அதிகாலையில் தனது வயலுக்கருகே ஒரு பச்சிளங்குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்டுள்ளார்.
அதிர்ச்சியுடன் சத்தம் கேட்ட பகுதிக்கு வந்தவர் மண்ணுக்கடியில் இருந்து வரும் சத்தத்தை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக தனது கையாலேயே நிலத்தை தோண்டியதில் சின்னஞ்சிறு மனித கால் தென்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு அருகே இருந்த ஹிம்மத் நகர் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். வாய் மற்றும் மூக்கில் மண் போன நிலையில் உயிருக்காக போராடிய குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், ”சுமார் 7 மாதங்களில் குறைப்பிரசவத்தில் பிறந்த பச்சிளங்குழந்தை தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணியளவில் குழந்தை கிணற்றுக்குள் வீசப்பட்டிருக்க வேண்டும். மண்ணுக்குள் புதைக்கப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கடும் நடவடிக்கை வேண்டும்!
பிறந்து சில மணி நேரங்களே ஆன இரண்டு பெண் பச்சிளங்குழந்தைகள், உயிருக்கு போராடிய நிலையில் அதிர்ஷ்டவசமாக குஜராத்தில் மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண் குழந்தைகள் குறித்து நாட்டில் எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள், திட்டங்கள் ஆகியவை கொண்டு வந்தும், இதுபோன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் பச்சிளங்குழந்தைகளை தூக்கி எறிந்துவிட்டு செல்லும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
’பேட்டி பச்சாவோ’ அதாவது பெண் குழந்தையைக் காப்போம் என்று முழங்குகிறார் பிரதமர் மோடி. ஆனால் அவரது சொந்த மாநிலமான குஜராத்திலேயே பெண் குழந்தைகள் கிணற்றில் வீசப்படுவதும், மண்ணில் புதைக்கப்படுவதும் அதிர்ச்சியளிக்கிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஹிட்லர் வென்ற கதை தெரியாதா? மோடி மீது ராகுல் விமர்சனம்