ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கான கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரது ப்ளூ டிக் அகற்றப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அதில் ஒன்று ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கான மாத கட்டணம்.
உலகில் பிரபலமான அரசியல் வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், பத்திரிக்கையாளர்கள், செய்தி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள்,
விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் அவர்களது ட்விட்டர் கணக்கை அதிகாரப்பூர்வமானதாக இருக்க ட்விட்டரில் ப்ளூ டிக் ஐடியை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டர் ப்ளூ டிக் ஐடியை பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு மாதந்திர கட்டணமாக ஐஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு போன்களுக்கு ரூ.900 மற்றும் இணையத்தில் பயன்படுத்த ரூ.600 செலுத்த வேண்டும் என்று ட்விட்டர் சிஇஓ அறிவித்தார்.
ட்விட்டர் ப்ளூ டிக் கட்டண முறை இந்தியாவிலும் நடைமுறைக்கு வந்தது. மேலும், கட்டணம் செலுத்தாதவர்களுக்கான ப்ளூ டிக் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 21) ஆம் தேதி காலை முதல் கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக் அகற்றப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு உள்ளிட்ட பலரது ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்களின் ட்விட்டர் ப்ளூ டிக்கும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம், கார்த்தி, இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரது ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
பல பாலிவுட் நடிகர்களின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள், எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் ஷர்மா ட்விட்டர் கணக்குகளில் இருந்தும் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

இதனால் பயனர்கள் பலரும் ட்விட்டரில் யாருடைய ட்விட்டர் கணக்குகளில் இருந்தெல்லாம் ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தேடி வருகின்றனர்.
மோனிஷா