முடங்கிய ட்விட்டர்: கட்டுப்பாடுகளை விதித்த எலோன் மஸ்க்

டிரெண்டிங்

ட்விட்டரில் புதிய கட்டுப்பாடுகளை அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் விதித்துள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். புளூ டிக் வெரிஃபிகேஷன், அதற்கு கட்டணம் என மாற்றங்களை கொண்டு வந்தார்.

இதில் ப்ளூ டிக் முகப்பு பக்கம் பெற்ற பயனாளர்களுக்கு குறைவான விளம்பரங்கள், நீண்ட பதிவுகள், 30 நிமிடங்களில் 5 முறை எடிட் என பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தினார்.

உலக தலைவர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் அதிகளவு பயன்படுத்தி வரும் ட்விட்டர் பக்கத்தை அவ்வபோது இப்படி எலோன் மஸ்க் மாற்றிக் கொண்டே இருப்பது அதன் பயனர்களிடையே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தசூழலில் நேற்று மாலை 5.50 மணி முதல் நள்ளிரவு வரை உலகம் முழுவதும் ட்விட்டர் பக்கம் சரியாக வேலை செய்யவில்லை. தகவல்களை அனுப்ப முடியாமலும் , பெற முடியாமலும், பழைய பதிவுகளை பார்க்க முடியாமலும் கோடிக்கணக்கானோர் தவித்தனர். இதுதொடர்பாக பலரும் புகார்களையும் தெரிவித்தனர்.

இப்படி நீண்ட நேரமாக ட்விட்டர் பக்கம் முடங்கியிருந்த நிலையில் நள்ளிரவு எலோன் மஸ்க் மூன்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில், “தீவிர அளவில் தேவையற்ற தரவுகளை ஒழிப்பது மற்றும் ட்விட்டரை கையாளுவது ஆகியவற்றுக்காக தற்காலிக வரம்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அதன்படி அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளில் நாள் ஓன்றுக்கு 6 ஆயிரம் பதிவுளை மட்டுமே பார்க்கமுடியும். அங்கீகரிக்கப்படாத ட்விட்டர் கணக்குகளில் நாள் ஓன்றுக்கு 600 பதிவுளை மட்டுமே பார்க்க முடியும்.

அங்கீகரிக்கப்படாத புதிய ட்விட்டர் கணக்குகளில் தினசரி 300 பதிவுகளை மட்டுமே பார்வையிட முடியும்” என்று முதல் ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவை இரவு 10.31 மணிக்கு வெளியிட்டிருந்த எலோன் மஸ்க், மீண்டும் 12.16 மணிக்கு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில், “மேற்குறிப்பிட்ட வரம்புகளை அதிகரித்து அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளில் நாள் ஓன்றுக்கு 8 ஆயிரம் பதிவுகளை பார்க்கமுடியும். அங்கீகரிக்கப்படாத ட்விட்டர் கணக்குகளில் நாள் ஓன்றுக்கு 800 பதிவுகளை பார்க்க முடியும். அங்கீகரிக்கப்படாத புதிய ட்விட்டர் கணக்குகளில் தினசரி 400 பதிவுகளை பார்வையிட முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதைதொடர்ந்து அதிகாலை 3.19 மணிக்கு வெளியிட்ட பதிவில், இந்த எண்ணிக்கை முறையே 10000, 1000, 500ஆக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். எலோன் மஸ்க்கின் இந்த பதிவுகள் ட்விட்டர் பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக முழுவதும் 450 மில்லியனுக்கு அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் சமூக வலைதள பக்கத்தில் இப்படி கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததற்கு இணையதள வாசிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எலோன் மஸ்கின் பதிவிற்கு, “சகோதரரே இந்த கட்டுப்பாடுகளை நீக்குங்கள், உண்மையில் இது யாருக்கும் பிடிக்கவில்லை”, “மீண்டும் வரம்புகள் இன்றி ட்விட்டரை கையாளும்படி மாற்றியமையுங்கள்” என்று பயனர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிலர் இனி ட்விட்டரை பயன்படுத்த போவதில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

இதனால் உலக அளவில் 1,40,000 ட்வீட்டுகளுடன் #TwitterDown என்ற ஹேஷ்டேக்கும், #RIPTWITTER என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன்.

பிரியா

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

ஜி.எஸ்.டி வசூல்: சென்னை மூன்றாவது இடம்!

Elon Musk imposed restrictions
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *