மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இரட்டை சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இரட்டை சகோதரிகளான பிங்கி மற்றும் ரிங்கி இருவரும் மும்பையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மாகாரஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த அதுல் என்பவரைத் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்த முடிவினை இவர்களது பெற்றோரும் ஏற்றுக் கொண்டு இந்த திருமணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
அதன்படி இவர்கள் திருமணம் மாகாரஷ்டிரா, சோலாப்பூரில் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. பிங்கி மற்றும் ரிங்கி இருவரும் சிறு வயதில் இருந்து ஒரே வீட்டில் ஒன்றாகவே வளர்ந்து வந்ததுள்ளனர்.
இதனால் தான் இவர்கள் இருவரும் ஒரே நபரைத் திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி அதுல் இவர்களின் குடும்ப நண்பர் என்பதால், அவரும் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த திருமணம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பலரும் இது சட்டப்பூர்வமானதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து இரட்டை சகோதரிகளை மணந்து கொண்ட அதுல் மீது ஐபிசி பிரிவு 494 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சோலாப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஷிரிஷ் சர்தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் அபராதத்துடன் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா