கோவை சூலூர் போலீசாரால் நேற்று (செப்டம்பர் 30) கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்த டிடிஎஃப் வாசன், நான் வேகமாக பைக்கில் பயணம் செய்தது தவறு தான். இனிமேல் பைக்கில் வேகமாக பயணம் செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
2கே கிட்ஸ்களுக்கு தனது பைக் சாகச வீடியோக்கள் மூலம் மிகவும் பரிச்சயமானவர் டிடிஎஃப் வாசன். இவர் Twin Throttlers என்ற யூடியுப் சேனலில், தனது பைக் சாகச வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி டிக் டாக் புகழ் ஜி.பி.முத்துவுடன் டிடிஎஃப் வாசன் பைக்கில் அதிவேகத்தில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து டிடிஎஃப் வாசனை கைது செய்ய வேண்டும் என்று, சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான குரல்கள் வலுத்தன.
இந்தநிலையில், டிடிஎஃப் வாசன் மீது கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் மோட்டார் வாகன சட்டம் 279,184 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 26-ஆம் தேதி மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜரான டிடிஎஃப் வாசன், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதனைப்போன்று, சூலூர் காவல் நிலையத்தில் பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுதல்,
ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று பெங்களூருக்குத் தப்பிச்செல்ல முயன்ற டிடிஎஃப் வாசனை, சூலூர் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் தனது வழக்கறிஞர்கள் உதவியுடன் ஜாமீன் பெற்று டிடிஎஃப் வாசன் விடுதலை ஆனார்.
ஜாமீனில் வெளிவந்த டிடிஎஃப் வாசன், வணக்கம் நான் உங்கள் வாசன் பேசுகிறேன் என அவரது பாணியிலேயே அறிமுகம் கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது, “இனிமேல் வேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன் என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளேன்.
ஊடகத்தினர் என் மீது தவறாக அவதூறு பரப்புகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக தான் வேகத்தை குறைக்க முடியும். என்னுடைய தவறை நான் உணர்ந்து விட்டேன்.
இனிமேல் நான் வேகமாக செல்ல மாட்டேன். நான் என்னுடைய பவரை காட்ட போகிறேன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
எனக்கு பயம் கிடையாது: ஊடகத்தினரை எச்சரிக்கும் டிடிஎஃப் வாசன்
அதிவேக பைக் ரைட் : டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்!