சென்னையில் உள்ள அண்ணா சாலையில் இன்று (பிப்ரவரி 22) நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் சென்னை மெட்ரோ விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 6ம் தேதி துருக்கி, சிரியா எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் உலகம் முழுவதும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக வரும் நாட்களில் இந்தியாவில் நிலநடுக்க பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அதன்படி கடந்த சில நாட்களில் குஜராத், அஸ்ஸாம், மேகாலயா போன்ற மாநிலங்களில் நில அதிர்வுகள் அடுத்தடுத்து உணரப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான அண்ணா சாலை அருகே உயரமான கட்டிடங்கள் சிலவற்றில் நில அதிர்வு உணரப்பட்டது.
அண்ணா சாலைக்கு அருகில் இருக்கும் ஒயிட்ஸ் சாலையில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் நில அதிர்வை உணர்ந்து கட்டிடத்திலிருந்து வெளியேறி சாலைக்கு வந்தனர்.
அதேபோல் அங்குள்ள கட்டிடத்தின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிலரும் இந்த நில அதிர்வை உணர்ந்து வேக வேகமாக தரை தளத்துக்கு வந்தனர்.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நில அதிர்வு குறித்து தேசிய மையத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியாகவில்லை.
நில அதிர்வுக்கும் மெட்ரோவுக்கும் சம்மந்தம் இல்லை
அதேநேரத்தில் இந்த நில அதிர்வுக்கு மெட்ரோ பணிகள் காரணமாக இருக்குமா என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலை அருகே உணரப்பட்ட நில அதிர்வுக்கும் மெட்ரோ பணிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சென்னை அண்ணா சாலை அருகே உணரப்பட்ட நில அதிர்வுக்கும் மெட்ரோ பணிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்தப் பகுதியில் எந்த மெட்ரோ பணிகளும் நடைபெறவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலநடுக்கம்
அதேவேளையில் இலங்கையின் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியில் இன்று காலை 11.44 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதனை உறுதிபடுத்தியுள்ள அந்நாட்டு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
சர்ச்சை பேச்சு : கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
அனுமதியின்றி பிரச்சாரமா? நாம் தமிழர் வேட்பாளர் மேனகா பதில்!