மொபைல் எண்களுக்கும் இனி கட்டணம்: டிராய் அதிரடி!
மனிதர்களின் அன்றாட வாழ்வில் செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், நாம் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய் முடிவு செய்துள்ளது.
மொபைல் எண்கள் மதிப்புமிக்க பொதுவளம் என்று டிராய் கருதுகிறது. இதனால் மொபைல் எண்களின் பயன்பாட்டை ஒழுங்குப்படுத்துவதற்காக கட்டணம் வசூலிக்கும் முடிவை டிராய் எடுத்துள்ளது. இந்த கட்டணத்தை மொபைல் சேவையை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் டிராய் வசூலிக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், மொபைல் எண்களுக்கு ரீச்சார்ஜ் செய்யாமல் குறைந்த அளவில் பயன்படுத்துவர்களுக்கும் அபராதம் விதிக்கலாமா என்று டிராய் பரிசீலித்து வருகிறது. அதாவது இரண்டு சிம்கள் பயன்படுத்தும் நபர் ஒருவர், நீண்டகாலத்திற்கு ஒரு சிம்மை உபயோகப்படுத்தாமல் இருப்பார்.
தங்கள் பயனரை இழக்க நேருமோ என்ற அச்சத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைந்த பயன்பாடு கொண்ட சிம்மை செயலிழக்காமல் வைத்திருப்பார்கள். இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க டிராய் முடிவு செய்துள்ளது.
“மொபைல் எண்களையும், சிம் கார்டுகளையும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் விதிக்க வேண்டும், அதேபோல, குறைந்த பயன்பாடு கொண்ட எண்களை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் சுமூகமான மொபைல் பயன்பாட்டை உறுதிசெய்ய முடியும்” என்று டிராய் தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்னி பஸ் புக் பண்றீங்களா? – முதலில் பதிவெண் பாருங்க!
தெகிடி பட நடிகர் பிரதீப் விஜயன் காலமானார்!