தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தக்காளியை இலவசமாக கொடுத்து வரும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை சதமடித்துள்ளது. தினசரி உணவில் அத்தியாவசிய பொருளாக மாறிய தக்காளியின் விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட சமூக வலைத்தளங்களில் தேடியும், நண்பர்கள் உறவினர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டும் வருகின்றனர்.
இருந்தாலும் தக்காளியின் தேவையும், விலையும் குறைந்த பாடில்லை. இன்று கூட ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலையால் இல்லத்தரசிகள் ஒரு புறம் சிரமப்பட்டு வரும் நிலையில், சுப நிகழ்ச்சிகளில் தக்காளியை பரிசாக கொடுப்பது, கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியாக தக்காளியை கொடுப்பது போன்ற ருசிகர சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் என்ற பகுதியில் மொபைல் போன் விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் அபிஷேக் அகர்வால் என்பவர் அவரது கடையில் ஸ்மார்ட் போன் வாங்குபவர்களுக்கு 2 கிலோ தக்காளியை இலவசமாக கொடுத்து வருகிறார். இதனால் அவரது கடையில் ஸ்மார்ட் விற்பனை அதிகரித்துள்ளதாக அபிஷேக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக தக்காளி வியாபாரம் செய்து அவரும் அஜய் பவுஜி என்ற வியாபாரி ஒருவர் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார்.
விலை அதிகரித்துள்ள நிலையில் அதிகளவிலான தக்காளியை குவித்து வைத்து விற்பனை செய்வது அச்சுறுத்தலாக இருப்பதால் தான் பவுன்சர்களை நியமித்ததாக அஜய் பவுஜா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
15 மீனவர்கள் கைது: நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம்!