கடந்த 30 ஆண்டுகளாக அரசு பேருந்து ஓட்டிய ஓட்டுநர், தான் ஓய்வு பெறும் நாளில் பிரிய மனமில்லாமல் பேருந்தை கட்டியணைத்து அழுத வீடியோ காட்சிகள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறையில் பணியாற்றிய ஊழியர்கள் 60 வயது எட்டிய காரணத்தினால் நேற்றுடன் (மே 31) பணி ஓய்வு பெற்றனர்.
அந்த வகையில் மதுரை திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில் பைக்காராவை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் பணியாற்றி வந்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், 60 வயது எட்டியதன் காரணமாக நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.
தான் ஓய்வு பெறும் கடைசி நாளான நேற்று திருப்பரங்குன்றம் வழியாக அனுப்பானடி மற்றும் மகாலட்சுமி காலனி செல்லும் அரசு பேருந்தை இயக்கினார்.
பின்னர் பணிமனையில் பேருந்தை கொண்டு சேர்த்த நிலையில் உணர்ச்சி வசப்பட்ட முத்துப்பாண்டி, இத்தனை ஆண்டுகாலம் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு மகிழ்ச்சியுடன் ஓட்டி வந்த அரசு பேருந்தை கடைசியாக ஒருமுறை வணங்கி முத்தமிட்டு நெகிழ்ந்தார்.
பின்னர் பேருந்தின் முன் சென்ற முத்துப்பாண்டி பேருந்தை கட்டிப் பிடித்து கண்ணீர் ததும்ப அழுதார். அவரை சக ஊழியர்கள் சமாதானம் செய்யவே, இந்த பணியின் மூலம் தன் வாழ்வில் கிடைத்த மனைவி, மக்கள், சமூகத்தில் மதிப்பு கிடைத்த பயன்களை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறினார்.
அதோடு தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
ஓட்டுநர் முத்துப்பாண்டியின் நெகிழ்ச்சி நிறைந்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கிறிஸ்டோபர் ஜெமா
அமமுக செயற்குழு கூட்டம் தேதி மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு!