இன்று பார்வையில் குறைபாடு உள்ள பலர், கண்ணாடி அணிவதற்கு பதில் கான்டாக்ட் லென்ஸை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதை முறைப்படி சரியாக அணிய வேண்டியது முக்கியம். அப்போதுதான் அது எதிர்பார்த்த பலனைக் கொடுக்கும். கான்டாக்ட் லென்ஸ் அணிகையில் பின்வருவனவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும், உறுதி செய்ய வேண்டும்.
கான்டாக்ட் லென்ஸ் அணிந்துகொள்பவர்கள் லென்ஸ் கண்களில் இருக்கும்போது தூங்கக்கூடாது. 10, 15 நிமிடங்களுக்குக்கூட கண்ணை மூடிக்கொண்டு குட்டித் தூக்கம் போடக்கூடாது. இப்படி கான்டாக்ட் லென்ஸ்களுடன் கண்களை மூடித் தூங்கும்போது கண்களுக்குப் போதுமான ஆக்சிஜன் ஓட்டம் கிடைக்காது. இது கண்களில் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் இந்தத் தவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது.
கைகளை நன்றாகச் சுத்தம் செய்த பிறகுதான் கான்டாக்ட் லென்ஸை கையால் எடுக்க வேண்டும். சுத்தமில்லாத கைகளால் கான்டாக்ட் லென்ஸைக் கையாளும்போது அதனாலும் கண்களில் தொற்று உண்டாக நேரிடலாம்.
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவர்கள் கைகளில் நகம் வளர்க்கக் கூடாது. கையில் இருக்கும் நகங்கள் பட்டு கான்டாக்ட் லென்ஸ் கிழிவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் கையில் நகங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். அதுமட்டுமல்லாமல், கையில் நகங்கள் இருந்தால் கான்டாக்ட் லென்ஸை அணியும்போது நகங்கள் கண்களைக் குத்தவும் வாய்ப்புகள் உள்ளது என்பதால் விரல் நகங்களை வளர வளர வெட்டிவிட வேண்டும்.
`மெட்ராஸ்-ஐ’ போன்ற கண் தொற்றுகள் ஏதேனும் கண்களைத் தாக்கும்பட்சத்தில் அது முற்றிலும் சரியாகும் வரை கான்டாக்ட் லென்ஸ்களை அணியக் கூடாது. கண் மருத்துவரிடம் கண்களைக் காட்டி தொற்று முழுவதும் சரியாகிவிட்டதா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அவர் சொன்ன பிறகே மீண்டும் கான்டாக்ட் லென்ஸ்களை அணிய வேண்டும்.
கல்யாணப் பெண்கள் கண்ணாடியைவிட கான்டாக்ட் லென்ஸை அணியத்தான் விரும்புவார்கள். அப்படியானவர்கள் திருமண நாளன்று முடிந்தவரை ஹோம தீ, புகையிலிருந்து கொஞ்சம் தள்ளியே உங்கள் கண்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், அதிலிருந்து வரும் சூடு லென்ஸை பாதிக்க வாய்ப்புள்ளது. அது கண்களையும் பாதிக்கும்’’ என்று கண் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.