வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என்று அறிவித்ததில் இருந்து இதுவரை விஜய் மற்றும் அஜித் நடிப்பில் ஒன்றாக வெளியான படங்கள் வைரலாகி வருகிறது.
சினிமா என்ற வார்த்தையைச் சொன்னாலே அஜித்தா, விஜய்யா என்று ரசிகர்கள் தங்களுக்குள் வாதங்களைத் தொடங்கி விடுகின்றனர். தற்போது துணிவா, வாரிசா என்ற போட்டி இருவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. காரணம் இந்த ஆண்டு பொங்கலுக்கு 2 மாஸ் ஹீரோக்களின் படம் வெளியாகவுள்ளது.
என்னதான் வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒரே நாளில் வெளியானாலும், அஜித் மற்றும் விஜய் படங்கள் ஓரே நாளில் வெளியாவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகி நேருக்கு நேர் மோதியுள்ளன.
1996 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் விஜய் அஜித் படங்கள் நேருக்கு நேர் மோதின. 1996 பொங்கல் ஸ்பெஷலாக அஜித் நடிப்பில் வான்மதி படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியான இரண்டு நாள் கழித்து ஜனவரி 15 ஆம் தேதி விஜய் நடிப்பில் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படம் வெளியானது.
தொடர்ந்து அடுத்த மாதமே பிப்ரவரி 18 ஆம் தேதி விஜய் நடிப்பில் பூவே உனக்காக மற்றும் அஜித் நடிப்பில் கல்லூரி வாசல் படங்கள் வெளியாகின. கல்லூரி வாசல் படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரசாந்த் நடித்திருக்க, அஜித் கவுரவ தோற்றத்தில் நடித்திருப்பார்.
1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி அஜித் நடிப்பில் ரெட்டை ஜடை வயசு படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து 6 நாள் இடைவேளைக்குப் பிறகு விஜய்யின் காதலுக்கு மரியாதை திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாகக் காதலுக்கு மரியாதை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாகவும் அமைந்தது.
1998 ஆம் ஆண்டு விஜய்யின் நிலாவே வா திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதியும் அஜித்தின் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் ஆகஸ்ட் 15 ஆம் தேதியும் வெளியானது.
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் கதாநாயகனாக கார்த்திக் நடித்திருக்க அஜித் கவுரவ தோற்றத்தில் நடித்திருப்பார். நிலாவே வா படத்தை விட உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
1999 ஆம் ஆண்டு விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் ஜனவரி 29 ஆம் தேதி வெளியாகியது. 6 நாட்கள் இடைவேளைக்குப் பிறகு அஜித்தின் உன்னைத் தேடி பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியானது.
2000 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி விஜய் நடிப்பில் குஷி மற்றும் அஜித் நடிப்பில் உன்னைக் கொடு என்னைத் தருவேன் வெளியாகின. வசூல் ரீதியாக விஜய்யின் குஷி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
2001 ஆம் ஆண்டு விஜய்யின் ஃப்ரண்ட்ஸ் மற்றும் அஜித்தின் தீனா பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியானது. இரண்டு படங்களுமே வசூலில் 40 கோடியைக் கடந்தது. இந்த தீனா படத்தில் இருந்துதான் அஜித்தை தல என்று அழைக்கும் ட்ரெண்டு உருவானது.
2002ஆம் ஆண்டு விஜய்யின் பகவதி மற்றும் அஜித்தின் வில்லன் படங்கள் நவம்பர் 4 ஆம் தேதி வெளியானது. இதில் வசூல் ரீதியாக வில்லன் படம் 38 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது.
2003 ஆம் ஆண்டு விஜய்யின் திருமலை மற்றும் அஜித்தின் ஆஞ்சநேயா படங்கள் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக ஆஞ்சநேயா படத்தை விடத் திருமலை படம் 15 கோடி அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
2006 ஆம் ஆண்டு விஜய் நடித்த ஆதி மற்றும் அஜித் நடித்த பரமசிவன் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியானது. இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகப் போட்டி போட்டு கொண்டாலும் விஜய்யின் ஆதி படம் அதிக வசூல் செய்தது.
2007 ஆம் ஆண்டு விஜய்யின் போக்கிரி, அஜித்தின் ஆழ்வார் படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது.
இதனைத் தொடர்ந்து 6 வருட இடைவேளைக்குப் பிறகு விஜய் நடிப்பில் ஜில்லா மற்றும் அஜித் நடிப்பில் வீரம் படங்கள் ஜனவரி 10 ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக 2014ஆம் ஆண்டு வெளியானது. விஜய் படத்தை விட அஜித் படம் வசூலில் முதல் இடத்தை பிடித்தது.
தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு அதாவது 9 வருடங்கள் கழித்து விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளன.
ஒரே நாளில் படம் வெளியாகும் என்று அறிவித்ததில் இருந்து விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்த ஹீரோக்களின் படங்களின் போஸ்டர்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு ஒன்றாக வெளியான விஜய், அஜித் படங்களையும் பகிர்ந்து வருவதால் “நேருக்கு நேர் மோதிய விஜய் அஜித்” படங்கள் வைரலாகி வருகிறது.
இதுவரை 5 முறை அஜித், விஜய் படங்கள் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகியுள்ளது. தற்போது 6வது முறையாகப் பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாகவுள்ளது.
மோனிஷா
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா போட்ட புதிய உத்தரவு!
மத்திய சுகாதார அமைச்சரிடம் மா.சு வைத்த கோரிக்கைகள்!