பியூட்டி டிப்ஸ்: என்றும் இளமைக்கு முக்கியமான ‘மூன்று’ விஷயங்கள்!

Published On:

| By christopher

Three Things to Stay Forever young

Three Things to Stay Forever young

என்றும் பதினாறாக காட்சியளிக்க ஆசைப்படாதவர்கள் அரிது. அப்படித் தோற்றமளிப்போரைப் பார்க்கும்போதெல்லாம், ‘எப்படித்தான் அப்படியே இருக்காங்களோ’ என்ற கேள்வியும் எழும். ‘ஸ்கிரப்பர், டோனர், மாய்ஸ்சரைசர் என மூன்று முக்கியமான அடிப்படை விஷயங்களைப் பின்பற்றினாலே என்றும் இளமையாகக் காட்சியளிக்கலாம்’ என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள் வசுந்தரா அதற்கு வழிகாட்டுகிறார்.

1. சருமத்தின் இறந்த செல்களை நீக்க உதவும்  ஸ்கிரப்பர்

வறண்ட சருமத்துக்கு…

கனிந்த வாழைப்பழம் ஒன்றை கையால் பிசைந்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். ஐந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவவும். வறட்சி நீங்கி முகம் மின்னும்.

எண்ணெய்ப் பசை சருமத்துக்கு…

ஆரஞ்சுப்பழத்தின் தோலைக் காயவைத்து பவுடராக்கிக் கொள்ளவும். ஆரஞ்சுப்பழத் தோல் பவுடர் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – அரை டீஸ்பூன், தக்காளி பழத்தின் சாறு – கால் டீஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து ஐந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவவும். ஆரஞ்சு, தக்காளியில் உள்ள சிட்ரிக் அமிலம், எண்ணெய்ப் பசையை நீக்கி, முகத்தைப் பளிச்சிட வைக்கும்.

நார்மல் சருமத்துக்கு…

சிறிய ஆப்பிளின் தோல் நீக்கி சதைப் பகுதியை எடுத்து துருவிக்கொள்ளவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவவும். ஐந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கீழ் இருந்து மேலாக மசாஜ் செய்து ஐந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவவும். ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் சருமத்தின் இறந்த செல்களை நீக்கிப் பொலிவாக்கும்.

2. சரும துவாரங்கள் பெரிதாவதைத் தடுக்கும் டோனர்

வறண்ட சருமத்துக்கு…

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரைக் கொதிக்கவைத்து இறக்கவும். அதில், இரண்டு கைப்பிடி அளவு புதினா இலைகளைச் சேர்த்து மூடி வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, புதினா எசென்ஸ் தண்ணீரில் இறங்கியிருக்கும். அதை வடிகட்டி சருமத்தில் ஸ்பிரே செய்யவும்.

எண்ணெய்ப் பசை சருமத்துக்கு…

வெள்ளரிக்காய் ஒன்றை தோல் நீக்கி, நறுக்கிக் கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் இந்த வெள்ளரிக்காய் துண்டுகளைச் சேர்க்கவும். இத்துடன் கற்றாழை ஜெல் – ஒரு டீஸ்பூன், ரோஸ் வாட்டர் – ஒரு டீஸ்பூன் கலந்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டி, முகத்தில் ஸ்பிரே செய்யவும்.

நார்மல் சருமத்துக்கு…

அகலமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். கொதித்த நீரில் ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களைச் சேர்த்து ஆறவிடவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரை வடிகட்டி, சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்துப் பயன்படுத்தவும். ரோஜா எசென்ஸ் சருமத்தை வறட்சியில் இருந்து காக்கும்.

3. சரும வறட்சியைத் தடுக்கும் மாய்ஸ்சரைசர்

எண்ணெய்ப் பசை சருமத்துக்கு…

கடைகளில் வாங்குவதானால் ஜெல் டைப் மாய்ஸ்சரைசர் பெஸ்ட் சாய்ஸ். வீட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்றால் கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன் , க்ரீன் டீ டிகாக்‌ஷன் – 4 டீஸ்பூன் எடுத்து, ஒன்றாகக் கலந்து சருமத்தில் தடவவும். தினமும் இப்படிச் செய்து வர, முகத்தில் எண்ணெய் வடிவது கட்டுப்படும்.

வறண்ட சருமத்துக்கு…

சில துளிகள் பாதாம் எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். இது வறட்சியை நீக்கி, முகத்துக்குப் பளபளப் பைத் தரும்.

நார்மல் சருமத்துக்கு…

ஐந்து டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லில் இரண்டு டீஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். இதை சருமத்தில் தடவிவர முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

வேலைவாய்ப்பு: ESIC- யில் பணி!

சாலை வெள்ளமும்… சால்னா உள்ளமும்… : அப்டேட் குமாரு

வசூல் : பதான், ஜவான் சாதனையை முறியடிக்குமா ‘அனிமல்’!

Three Things to Stay Forever young

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel