சென்னை திருவான்மியூர் கடற்கரையில் திறந்தவெளி திரையரங்கில் நேற்று மதராசப்பட்டினம், சென்னை 60028 ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.
ஹெச்டி, 4K 5K தொழில்நுட்பங்களோடு திரைப்படங்களை திரையில் பார்த்தாலும் மணலில் அமர்ந்து திறந்தவெளி திரையரங்கில் படம் பார்ப்பது என்பது புதுவிதமான அனுபவத்தையும் கடந்த கால நினைவலைகளை மீள் உருவாக்கம் செய்வதாக உள்ளதாகவே பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையின் 384-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தி இந்து குழுமம் சென்னை மாநகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி துறையுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை மக்களின் வாழ்வியலையும் அழகியலையும் திரையில் காட்சிப்படுத்திய படங்களான மதராசப்பட்டினம், சென்னை 600028 படங்கள் திருவான்மியூர் கடற்கரையில் திறந்தவெளி திரையிரங்கில் திரையிடப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகமானோர் திரைப்படம் காண வந்தனர். அவர்கள் கடற்கரை மணலில் அமர்ந்து இரண்டு திரைப்படங்களையும் கண்டுகளித்தனர்.
தனது குழந்தையுடன் படம் பார்க்க வந்த திருவான்மியூரை சேர்ந்த ரம்யா தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “திறந்தவெளி திரையரங்கில் படம் பார்த்தது கடந்த காலங்களை நினைவூட்டுவதாக உள்ளது. எனது குழந்தை படம் பார்த்த அனுபவத்தை நான் ஆர்வமாக கண்டுகளித்தேன். இதுபோன்ற திரைப்படங்களை திரையிடுவதற்கு உகந்த இடமாக திருவான்மியூர் கடற்கரை உள்ளது” என்று தெரிவித்தார்.
கல்லூரி நண்பர்களுடன் படம் பார்க்க வந்த மாணவர் ராஜா, “இதுவரை திறந்தவெளி திரையரங்கில் நாங்கள் படம் பார்த்ததில்லை. இது புதுவிதமான அனுபவத்தை கொடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்