என்றும் இளமையைத் தக்கவைத்துக் கொள்ள நரைத்த கேசத்தை கருமையாக்க பலரும் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். ஹேர் டை செய்யும்போது பக்கவிளைவுகளை முன்னிறுத்தி கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி விளக்குகிறார்கள் சரும மருத்துவர்கள்.
`டெம்ப்ரரி’ (Temporary), `செமி பெர்மனென்ட்’ (Semi-permanent), `பெர்மனென்ட்’ (Permanent) என மூன்று வகையான ஹேர் டைகள் கடைகளில் கிடைக்கின்றன. டெம்ப்ரரி ஹேர் டை 5 முதல் 10 நாள்கள் வரை முடியில் நிறத்தை தக்கவைக்கும். செமி பெர்மனென்ட் ஹேர் டை 20 – 30 நாள்களுக்கு நிறத்தை தக்கவைக்கும். பெர்மனென்ட் ஹேர் டை 45 நாள்கள் வரை நீடிக்கும்.
மார்க்கெட்டில் விற்கப்படும் ஹேர் டை பேக்கில் இரண்டு பாக்கெட்டுகள் இருக்கும். ஒன்று ஹேர் டை, மற்றொன்று `ஹைட்ரஜன் பெராக்ஸைடு’ (Hydrogen Peroxide) என்ற ரசாயனம். ஹேர் டையில் `ஃபீனால்’ (Phenol), `அமைன்’ (Amine), அமோனியா போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இவை முடியினுள் டை செல்ல வழிவகுக்கும். ஹைட்ரஜன் ஃபெராக்ஸைடு, முடிக்கான நிறத்தை தரும். இரண்டையும் கலந்து முடியில் அப்ளை செய்ய வேண்டும். Things to consider while hair dye
ஃபீனால், அமைன் ரசாயனங்கள் தவிர, பிபிடிஏ (PPDA – Paraphenylenediamine) என்ற ரசாயனம் பொதுவாக அனைத்து ஹேர்டைகளிலும் இருக்கும். இந்த ரசாயனம் கொண்ட டை பயன்படுத்திய தும் சிலருக்கு முகம் வீக்கமடையலாம், முகம் சிவந்து காணப்படலாம், ஸ்கால்பில் அரிப்பு ஏற்படலாம். அப்படி நேர்ந்தால், அவர்கள் அதை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக நாள்கள் நிலைக்கும் பெர்மனென்ட் வகையான ஹேர்டைகளில் ரசாயனங்களும் அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்துவதால் சருமப் பிரச்னைகளும் முடி சார்ந்த பிரச்னைகளும் ஏற்படலாம். சிலருக்கு தலையில் வியர்க்கும்போதும், தலை குளித்த பிறகும் முடியில் இருக்கும் டையின் ரசாயனங்கள் முகத்தில் படியும்.
இது காலப்போக்கில் கரும் புள்ளிகளாக (Deep Pigmentation) ஆகும். இதனை சரிசெய்வது சவாலாக இருக்கும். அவை நிரந்தரமாகி விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. சருமம், முடி மட்டுமன்றி நுரையீரலிலும் ஹேர் டையினால் பாதிப்பு ஏற்படலாம். டையில் வாசனைக்காக பல ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். இந்த வாசனை சிலருக்கு நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே… “PPDA, அமோனியா, ஃபீனால் ஆகிய ரசாயனங்கள் இல்லாத ஹேர்டையை தேர்வு செய்ய வேண்டும். அனைத்து வகை டையிலும் பக்கவிளைவுகள் இருக்கும். பாதிப்பை குறைப்பதற்கு பெர்மனென்ட் டைக்கு பதிலாக டெம்ப்ரரி டை தேர்ந்தெடுக்கலாம்.
ஹேர் டையை அடிக்கடி பயன்படுத்தாமல் குடும்ப விழாக்கள், அலுவலக மீட்டிங் போன்ற முக்கியமான நேரத்தில் மட்டும் பயன்படுத்தலாம்’’ என்று பரிந்துரைக்கிறார்கள்.