பீகாரில் முழு டீசல் இன்ஜினின் பாகங்களை மூட்டை மூட்டையாக திருடி எடைக்கு போட்டு காசு பார்த்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள கர்காரா ரயில்வே யார்டுக்கு கடந்த வாரம் பழுதுபார்ப்பதற்காக ஒரு டீசல் ரயில் இன்ஜின் கொண்டு வரப்பட்டது.
அங்கே ஒருவாரமாக நின்ற இன்ஜினின் ஒவ்வொரு பகுதியும் காணாமல் போயிருக்கிறது. ஒருகட்டத்தில் இன்ஜினே காணாமல் போக நேற்று ரயில்வே நிர்வாகத்தினர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்த விசாரணையில், ரயில்வே யார்டில் சுரங்கபாதை அமைத்து டீசல் இன்ஜினின் பாகங்களை சிறிது சிறிதாக திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் திருடிய இன்ஜின் பாகங்களை எடைக்கு போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், முசாபர்பூரில் உள்ள பிரபாத் நகர் பகுதியில் இருக்கும் பழைய பொருட்கள் குடோனில் போலீசார் ஆய்வு செய்தனர்.
அங்கு திருடப்பட்ட முழு ரயில் இன்ஜின் உதிரி பாகங்களும் 13 மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் இன்ஜின் சக்கரங்கள் மற்றும் கனமான இரும்பினால் செய்யப்பட்ட ரயில் பாகங்கள் போன்றவை இருந்தன.
இதுகுறித்து முசாபர்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் பிஎஸ் துபே கூறுகையில்,
”கர்காரா யார்டுக்கு பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட டீசல் இன்ஜின் திருடப்பட்டது தொடர்பாக பராவ்னி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பழைய பொருட்கள் குடோனின் உரிமையாளரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.” என்றார்.
கடந்த ஆண்டு, பூர்னியா நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய நீராவி இன்ஜினை விற்றதாகக் கூறி, பீகாரில் உள்ள சமஸ்திபூர் லோகோ டீசல் கொட்டகையைச் சேர்ந்த ரயில்வே பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
காந்தாரா பாடல் தடை நீக்கம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
இந்தி திணிப்பு: தீக்குளித்து முதியவர் உயிரிழப்பு!