ஒடிசாவில் நடந்துள்ள கோர ரயில் விபத்தில் சிக்கி சிறுகாயங்களுடன் தப்பிய இளைஞர் ஒருவர் விபத்து குறித்து விவரித்துள்ளது அதன் துயரத்தை உணர்த்தியுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 2) மூன்று ரயில்கள் மோதியதில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 288ஆக உயர்ந்துள்ளது.
நம் நாட்டில் இதுவரை நடந்துள்ள ரயில் விபத்துகளில் மிக மோசமானதாக கருதப்படும் இந்த விபத்து பலரையும் உலுக்கியுள்ளது.
விபத்தில் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்த தமிழகம், ஆந்திரா, மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து நேற்று விபத்தில் இருந்து தப்பிய ஒடிசாவைச் சேர்ந்த அனுபவ் தாஸ் என்பவர் பகிர்ந்துள்ள பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அவரது பதிவில், “ஹவுராவிலிருந்து சென்னை செல்லும் கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த நான், காயமின்றி தப்பியதற்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது மிகப்பெரிய ரயில் விபத்து.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியுள்ளன.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பக்கவாட்டில் லூப் டிராக்கில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி தடம் புரண்டது.
அப்போது, தடம் புரண்ட பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் கவிழ்ந்தன. அப்போது எதிரே வந்த யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்ட பெட்டிகள் மீது அதிவேகத்தில் மோதியது.
இதில் யஷ்வந்த்பூர் விரைவு ரயிலின் 3 ஜெனரல் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்து தடம் புரண்டன.
அதேவேளையில் ஜெனரல், ஸ்லீப்பர், ஏசி 3 அடுக்கு மற்றும் ஏசி 2 அடுக்கு உட்பட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் கிட்டத்தட்ட 13 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்தன.
இந்த கோர விபத்தில் சிக்கி நானே இதுவரை சுமார் 250 க்கும் மேற்பட்ட உடல்களை கண்டுவிட்டேன். கைகால்கள் இல்லாத உடல்கள் மற்றும் ரயில் பெட்டிகளுக்கு அடியில் ரத்தகளரியாய் உயிரற்று கிடப்பது, இனி என்னால் என்றைக்கும் மறக்க முடியாத காட்சியாக இருக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்று அனுபவ் தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் கோரமண்டல் ரயிலில் முதல் ஏசி பெட்டியில் பயணித்த இவர் சிறிய காயங்களுடன் NDRF குழுவால் மீட்கப்பட்ட நிலையில் பத்திரமாக வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்கு பலரும் தற்போது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒடிசா விபத்து: கவாச் சிஸ்டம் என்னாச்சு?
விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டவர்: ஸ்பாட்டுக்கு சென்ற தமிழக அதிகாரி விளக்கம்!