உலகம் முழுவதும் பலரும் மாரடைப்பால் மரணமடைந்து வருவதால் ட்விட்டரில் இன்று (பிப்ரவரி 24) #Heartattack என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது.
கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் மாரடைப்பால் இறக்கும் பல அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன.
இன்று ஹைதராபாத்தில் மட்டும் இரண்டு பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். 24 வயது போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 40 வயதான நபர் ஒருவர் திருமண விழாவில் பங்கேற்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தின் (NCBI) கருத்துப்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில் ஐந்தில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக #Heartattack என்ற ஹேஷ்டாக் இன்று ட்விட்டரில் ட்ரெண்டானது.
இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரித்து வருவது குறித்து மருத்துவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பெங்களூரைச் சேர்ந்த இதயவியல் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள வீடியோவில், “மாரடைப்பு ஏற்பட்டால் ஏதாவது ஒரு நிலையில் உட்கார்ந்தாலோ, இஞ்சி பூண்டு போன்றவற்றை உட்கொண்டாலோ அல்லது இருமினாலோ தும்மினாலோ சிரித்தாலோ மாரடைப்பு குணமாகாது. உங்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் இருதய நோய் வசதிகள் உள்ள மருத்துவமனையை உடனடியாக சென்றடைந்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
மாதவிடாய் விடுமுறை : கொள்கையை உருவாக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!
இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!