மனைவி மற்றும் தனது இரு மகள்களை கோதாவரி ஆற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற தந்தையின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சொந்த தந்தையின் கொலை முயற்சியில் இருந்து துரிதமாக மீண்ட சிறுமியின் தைரியத்தை காவல் துறையினரும் பொது மக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தாடேபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் புப்பாலா சுஹாசினி. 36 வயதான இவர் கருத்து வேறுபாடு கரணமாக தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 13 வயதில் கீர்த்தனா என்ற மகள் இருக்கிறார்.
சுஹாசினி தனது மகள் உடன் தனித்து வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு உலாவா சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், இவர்களின் பழக்கம் ஒரு கட்டத்தில் திருமணத்தில் முடிந்த நிலையில், இந்த தம்பதிக்கு ஜெர்ஷி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.
இச்சூழலில், சமீப காலமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கியுள்ளது.
தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சுரேஷ் ஒரு கட்டத்தில் மனைவி மகள்கள் உட்பட அனைவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
இச்சூழலில், கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி துணி வாங்கச் செல்வதாக கூறி மூவரையும் ராஜமகேந்திராவரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் அங்கு செல்லாமல், இரவு முழுதும் வேறு வழிகளில் சென்று இறுதியாக, கோதாவரி ஆற்றின் அருகே உள்ள கௌதமி பழைய பாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கௌதமி பழைய பாலத்திற்கு அருகே சென்று மூவரையும் செல்ஃபி எடுக்க வற்புறுத்தியுள்ளார். இவரின் திட்டத்தை அறியாத மூவரும் பாலம் அருகே சென்று செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாரா வண்ணம் மூவரையும் ஆற்றுக்குள் தள்ளிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
சுஹாசினி மற்றும் ஒன்றரை வயதான ஜெர்ஷியும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சுதாரித்துக் கொண்ட கீர்த்தனா பாலத்தின் கீழ் இருந்த பைப்பினை பிடித்துக் கொண்டார். தொங்கிய நிலையில் இருந்த கீர்த்தனா தனக்கு உதவக்கோரி கூச்சலிட்டுள்ளார். பின்னர் தன்னிடம் தொலைபேசி இருந்ததை அறிந்த கீர்த்தனா, துரிதமாக செயல்பட்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறை மற்றும் மீட்பு துறையினர் பைப்பில் சுமார் 36 நிமிடங்களுக்கு மேல் தொங்கிய கீர்த்தனாவை பத்திரமாக மீட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தாய் சுஹாசினி மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஜெர்ஷி இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல் அதிகாரி ரஜினிகுமார், “இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் இரு குழுவாக பிரிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக இருட்டில் பாலத்தின் பைப்பில் தொங்கியபடி இருந்த சிறுமியின் இந்த துணிச்சலான செயல் வெகுவாகப் பாராட்டுக்குரியது.
தக்க சமயத்தில் சிறுமி அருகில் உள்ள ரவுலபாலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தை அணுகியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.ஐ. வெங்கடரமணா குழு, துரிதமாக செயல்பட்டு சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர்.
மேலும் காவல் துறையினர் இரு குழுவாக பிரிந்து, ஒரு குழு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் உடலை தேடும் பணியிலும், மற்றொரு குழு இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட உலவா சுரேஷை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”அண்ணாமலை கருத்து குறித்து கவலை இல்லை”- செல்லூர் ராஜு
செப்டம்பரில் வெளியாகிறது ஐபோன் 15: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!