மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் கரண் சிங் வர்மா டீ குடித்த பாக்கியைத் திருப்பி தருமாறு டீக்கடை உரிமையாளர் வழியை மறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரான கரண் சிங் வர்மா, தற்போது இச்சாவர் தொகுதியில் (முன்பு சீஹோர்) பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக உள்ளார்.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு பாஜக முக்கிய தலைவர்கள் தங்கள் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போதைய எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பாஜகவை சேர்ந்த கரண் சிங் வர்மா சீஹோர் மாவட்டம் இச்சாவர் தொகுதிக்கு காரில் சென்றுள்ளார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ஒருவர் கரண் சிங் வர்மாவின் காரை வழிமறித்தார்.
காரை டிரைவர் நிறுத்தியபோது, எம்எல்ஏவிடம் சென்ற டீக்கடை உரிமையாளர் 2018-ம்ஆண்டு முதல் டீக்கடையில் சாப்பிட்டுவிட்டுத் தராமல் சென்ற ரூ.30 ஆயிரம் பாக்கி பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளார்.
சுமார் 4 ஆண்டுகளாகக் கொடுக்காமல் இருந்த டீ பாக்கியைக் கேட்டு எம்.எல்.ஏவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பொது இடத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றதால் கரண் சிங் வர்மா விரைவில் பணத்தைக் கொடுத்து விடுகிறேன் என்று கால அவகாசம் கேட்டார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 2018 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் டீ சப்ளை செய்தவருக்கு இன்னும் பணம் தரவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டுவதும் அதை முன்னாள் அமைச்சர் மறுக்காமல் இருந்ததும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
மோனிஷா
போர்ச்சுக்கல் கொடியை கிழித்த பாஜக: தர்ம அடி கொடுத்த ரசிகர்கள்!
அதிமுக பொதுக்குழு அப்பீல்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தாமதம் ஏன்?