’தமிழ்நாடு வாழ்க’ : வண்ண கோலங்களால் டிரெண்ட் செய்த தமிழர்கள்

டிரெண்டிங்

தை முதல் நாளை தமிழ்நாடு வாழ்க என கோலமிட்டு வரவேற்போம் என முதல்வர் ஸ்டாலின் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன் கோலம் வரைந்து அதனை சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மாநில அரசுக்கு இடையேயான மோதல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தமிழர்களுக்கு, தமிழுக்கு, சமூகநீதிக்கு எதிராக ஆளுநர் பேசி சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் தமிழ்நாடு என்று அழைப்பது பிரிவினைவாதத்தை குறிக்கிறது என்றும், தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று ஆர்.என்.ரவி தெரிவித்தார். இதற்கு பல்வேறு கட்சியைச் சேர்ந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 9ம் தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. ஆளுநர் உரையில் சில குறிப்பிட்ட வார்த்தைகளை ஆர்.என்.ரவி தவிர்த்த நிலையில் அவருக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.

அதனை தொடர்ந்து ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழிலும் தமிழ்நாடு என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏறபடுத்தியது.

தமிழகம் – தமிழ்நாடு என வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ள சூழலில் தான் தற்போது ’தமிழ்நாடு வாழ்க’ என்ற கோலம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.

செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள்! என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று விடுத்திருந்த வாழ்த்து மடலில், ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க’ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்கும் விதமாக மாநிலம் முழுவதும் அரசியல் தலைவர்களின் வீடுகள் மட்டுமின்றி, பொதுமக்களும் தங்கள் வீட்டின் முன் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்துடன் வண்ண வண்ணக் கோலங்களை போட்டுள்ளனர்.

இதன்மூலம் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு இயற்கைக்கு முன் அனைவரும் சமம் என உணர்த்தும் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ் மொழி மீதும், தமிழ்நாட்டின் மீதும் தாங்கள் வைத்துள்ள பற்றை தமிழர்கள் உணர்த்தியுள்ளார்கள்.

மேலும் தமிழ்நாடு வாழ்க கோலம் மூலம் தமிழ்நாட்டில் தனது சர்ச்சையான கருத்துகளால் இடையூறு செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தங்களது அரசியல் நிலைப்பாட்டை பொதுமக்கள் வெளிபடுத்தியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

தங்கள் வீட்டின் முன் போடப்பட்டுள்ள கோலத்தை பலரும் சமூகவலைதளங்களில் #தமிழ்நாடுவாழ்க என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிட்டு டிரெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

வாரசுடு : கொண்டாடிய ரசிகர்கள்… வசூலை அள்ளிய விஜய்

’நாட்டு நாட்டு’க்கு இன்ஸ்பிரேஷன்? : நடன இயக்குநர் கொடுத்த ஆச்சரிய பதில்

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *