ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சை தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘தமிழ்நாடு’ நம்பர் 1 இடத்தில் உள்ளது.
காசி தமிழ் சங்கத்தை ஏற்பாடு செய்தவர்களை கவுரவிக்கும் வகையில் சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று (ஜனவரி 4) நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியா முழுவதுக்கும் ஒரு செயல்திட்டம் இருந்தால். அதனைத் தமிழ்நாடு எதிர்க்கிறது.
முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என்று பேசினார். இதற்குத் தமிழ்நாட்டிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆளுநரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, அறிக்கை வெளியிட்டார்.
இதுபோன்று ட்விட்டர்வாசிகள் ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு என்ற பெயரை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.
இதனால் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு என்று பெயர் வர முக்கிய காரணமாக இருந்த சங்கரலிங்கனார் குறித்துப் பதிவிட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கனார், தமிழ்நாடு என்று சென்னை மாகாணத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று 1956 ஜூலை 26ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
அவரிடம் காமராஜர், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியும் அவர் தனது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக இருந்தார். சுமார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அவர் தனது 78 வயதில் மரணமடைந்தார்.
அவரை பற்றி நினைவு கூர்ந்து வரும் நெட்டிசன்கள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் பேசும்படியான புகைப்படத்தை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.
1967 ஜூலை 18 ஆம் தேதி சட்டப்பேரவையில், சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் அண்ணா. அதோடு மூன்று முறை ‘தமிழ்நாடு’ எனப் பேரவையில் முழங்கினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தை 1967 நவம்பர் 23 ஆம் தேதி மத்திய அரசு ஏற்றது. அப்போது முதல் சென்னை மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த வரலாற்று நிகழ்வை நெட்டிசன்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
மேலும், “தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம்.
சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்திருக்கிறோம்.
இருமொழிக் கொள்கை – தமிழ் – ஆங்கிலம் மட்டும்தான் மும்மொழிக்கு இடமில்லை. இந்த முப்பெரும் சாதனைகளை மாற்றலாம் என்று நினைத்தால் அவர்களை அறியாமல் ஒரு அச்சம் தோன்றும்.
அந்த அச்சம் இருக்கிறவரையில் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்” என்ற அண்ணாவின் பேச்சும் தற்போது வைரலாகி வருகிறது.
பிரியா
சிறந்த இயக்குனர் : விருதை வென்ற ராஜமெளலி
ஒப்பந்த செவிலியர்கள்: விஜயபாஸ்கருக்கு அமைச்சர் மா.சு பதில்!