என். சுப்புலட்சுமி என்ற பெண் எழுதிய கடிதத்தை பிரதமர் மோடியிடம் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் இன்று வழங்கியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக வில் தன்னை இணைத்துக்கொண்டவர் சி.ஆர்.கேசவன். இவர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரியின் கொள்ளுபேரன் ஆவார்.
இந்நிலையில், சி.ஆர்.கேசவன் தன்னை கட்சியில் இணைத்து கொண்டதற்கு பிரதமர் மோடியை இன்று(ஏப்ரல் 12) நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடியிடம் அவர் தமிழ்நாட்டுப்பெண் என்.சுப்புலட்சுமி எழுதிய கடிதத்தை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இன்று நான் சி.ஆர் கேசவனை சந்தித்தேன். அவர் தனது வீட்டில் சமையற்காரராகப் பணிபுரியும் சுப்புலட்சுமியின் கடிதத்தைப் பகிர்ந்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த என். சுப்புலட்சுமி ’பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் வீட்டிற்கு விண்ணப்பித்தார். அந்த திட்டம் அவரின் வாழ்க்கைக்கு முக்கிய பங்காற்றியுள்ளது” என்று கூறியுள்ளார்.
பிரதமரிடம் அளித்த கடிதத்தில் என். சுப்புலட்சுமி என்பவர் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நானும் பயனடைந்துள்ளேன். உங்களால் நாங்கள் கவுரமாக வாழ்கிறோம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
மேலும், அந்த கடிதத்தில் , ’பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (அனைவருக்கும் வீடு )என்ற திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி சுயமாக வீடு கட்டுவதற்கு நான் விண்ணப்பித்தேன். அத்திட்டத்தின் மூலம் நான்கு தவணை வீதம் 2,10,000 ரூபாயை பெற்று அவற்றின் மூலம் இப்போழுது நான் ஒரு வீட்டினை கட்டி உள்ளேன். இந்த வீடு எங்கள் தலைமுறையின் முதல் சிமெண்ட் கட்டிட வீடாக உள்ளது. இதன்மூலம் எங்களுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைத்துள்ளது.
இதனால் நாங்கள் மிகவும் பயன் அடைந்துள்ளோம். இவற்றின் மூலம் எங்களது சொந்த ஊரில் ஒரு கவுரவமான வாழ்வை வாழ்கின்றோம். தங்களின் தலைமையில் நடைபெறும் ஆட்சி முறையும் தங்களின் திட்டங்களும் தான் முக்கிய காரணம்” என்று கூறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பொன்னியின் செல்வன் 2: ’சிவோஹம்’ வீடியோ வெளியானது!
500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா: செந்தில் பாலாஜி