டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேற்று (ஜூன் 29) நடைபெற்றது. இதில், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.
2007ஆம் ஆண்டில் முதல் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தற்போது 2வது முறையாக உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த வெற்றியை இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு முதலே வெற்றிக் கொண்டாட்டங்கள் கலை கட்டிவரும் நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் வாழ்த்து
இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான சூழல்களில் தளராத மன உறுதியுடன் ஆட்டம் முழுவதும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இது ஒரு சிறந்த வெற்றி ஆகும்” என இந்திய அணியை வாழ்த்தி உள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து
உலகக்கோப்பை போட்டியில் வென்ற இந்திய அணி வீரர்களை வாழ்த்தி வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பாக இந்த பிரமாண்ட வெற்றிக்கு எனது வாழ்த்துகள். இந்த நாளில் உங்களின் அபாரமான ஆட்டத்தால் 1.40 கோடி இந்தியர்களை பெருமைப்பட வைத்துள்ளீர்கள்.
உலகக்கோப்பையை வென்றதன் மூலம் ஒவ்வொரு இந்திய கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள மக்களின் மனதையும் நீங்கள் வென்றுள்ளீர்கள். இந்த சிறப்பான தருணம் என்றும் நினைவுக்கூறப்படும்.
இது சாதாரணமான விஷயம் அல்ல. ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் நீங்கள் வெற்றியை நோக்கி முன்னேறியுள்ளீர்கள். எனது சார்பாக உங்களுக்கு அளப்பரிய வாழ்த்துகள்” என மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
ராகுல் காந்தி வாழ்த்து
இந்திய அணியின் வெற்றிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “’இந்திய அணி தனது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. சூர்யா, என்ன ஒரு அருமையான கேட்ச். ரோகித், இது உங்கள் தலைமைத்துவத்துக்கு கிடைத்த வெற்றி.
ராகுல், இனி உங்களின் வழிகாட்டுதலை இந்திய அணி நிச்சயம் மிஸ் செய்யும். இந்திய வீரர்களாகிய நீங்கள் நாட்டை பெருமையடைய செய்துள்ளீர்கள்” என்று வாழ்த்தினார்.
மேலும், ராகுல் காந்தி வெளியிட்ட மற்றொரு பதிவில், “உங்களின் இந்த சிறப்பான டி20 பயணத்திற்கு எனது வாழ்த்துகள். நீங்கள் உண்மையிலேயே பிரம்மாண்டமான முறையில் விடைபெறுகிறீர்கள்” என விராட் கோலிக்கு தனியாக ஒரு வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு எனது வாழ்த்துகள். குறிப்பாக விராட் கோலி, அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங் தனித்துவமாக விளையாடினார்கள்.
ஒவ்வொரு இந்தியனும் இந்த வெற்றியை நினைத்து பெருமைப்படுகின்றனர். உங்களின் சாதனைகள் என்றென்றும் கொண்டாடப்படும்” என்று வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அமித்ஷா வாழ்த்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தியாவுக்கு ஒரு சிறப்பான தருணம் இது. தொடர் முழுவதும் அணி வீரர்கள் குழுவாக தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உங்களின் இந்த வரலாற்று வெற்றியால் தேசம் பூரிக்கிறது” என்று இந்திய அணியை வாழ்த்தி உள்ளார்.
ராஜ்நாத் சிங் வாழ்த்து
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “இந்த வெற்றி வருங்கால கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். மொத்த நாடும் இந்த வெற்றியால் உச்சத்துக்கு சென்றுள்ளது. அணி வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு எனது வாழ்த்துகள்” என இந்திய அணிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழக தலைவர்கள் வாழ்த்து
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்றதற்கு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “எங்கள் இந்திய அணி 2-வது முறை டி20 உலக கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி!
நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனை படைத்துள்ளது” என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “17 ஆண்டுகளுக்கு பின்னர் 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
டி20 உலகக்கோப்பை 2024 இறுதிப் போட்டியின் கடைசி ஓவர்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. அது தலைசிறந்த டெத் ஓவர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சூர்யகுமார் யாதவின் கேட்ச் அற்புதமானது. தொடக்கம் முதலே சிறப்பாக இந்திய அணி செயல்பட்டது. வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை வாழ்த்து
“ஐசிசி டி20 உலகக்கோப்பையில் அற்புதமான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து விக்கெட்டுகளை இந்தியா கைப்பற்றியது. இறுதியில் ஒரு கேட்ச் வெற்றியை உறுதிப்படுத்தியது!
தொடர் முழுக்க சாம்பியன்களை போன்றே விளையாடினார்கள், இந்திய அணிக்கு வாழ்த்துகள்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
“டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் அற்புதமாக விளையாடி வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த ஐசிசி கோப்பையை வெல்வதற்கு நம்முடைய சாம்பியன் அணி முழு தகுதி பெற்றிருப்பது என்பதில் சந்தேகமில்லை” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்தி உள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹரிஷ் கல்யாணின் புதுப்பட அறிவிப்பு!
T20 World Cup 2024: ஓய்வை அறிவித்த விராட், ரோகித்