கலைஞர் நூலக திறப்பு விழாவில், கலைஞருடன் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினும், திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனும் அமர்ந்து பேசும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை புது நத்தம் சாலையில் ரூபாய் 215 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறக்கப்பட்டது.
மாலை 4.50 மணிக்குத் திறப்பு விழாவுக்காக முதல்வர் ஸ்டாலின் வந்ததும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் ‘கலைஞர்’ புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர்.
அங்கிருந்து உள்ளே சென்ற முதல்வர் ஸ்டாலின், நூலகத்துக்கு முன்பு ‘கலைஞர் எழுதும்படியாக’ வடிவமைக்கப்பட்டிருந்த சிலையைத் திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞர் புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலைஞர் சிலை முன்பு ஸ்டாலினுடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து கலைஞர் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின். நூலகத்தைத் திறந்து வைத்தபின், உள்ளே சென்று பார்வையிட்ட ஸ்டாலினுக்குத் தனது தந்தையும் தமிழ்நாட்டின் முதல்வருமான கலைஞருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அதாவது பல்வேறு சிறப்பம்சங்களுடன் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தில் ஆக்மெண்டட் ரியாலிட்டி வடிவில் கலைஞருடன் அமர்ந்து பேசுவது போல் திரை அமைக்கப்பட்டுள்ளது.
அந்தத் திரை அருகே கலைஞருடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகிய இருவரும் உற்சாகம் ததும்பப் பேசி நெகிழ்ந்தனர்.
இதனை அங்கிருந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர். கலைஞருடன் முதல்வர் அமர்ந்து பேசுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆக்மெண்டட் ரியாலிட்டி என்பது நிஜ உலகச் சூழலுடன் கணினியால் உருவாக்கப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளையும் தகவல்களையும் கலக்கும் ஒரு வித்தியாசமான தொழில் நுட்பம் ஆகும். இதைத்தான் கலைஞர் நூலகத்திலும் வடிவமைத்துள்ளனர்.
பிரியா
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்!
“விஜய் மட்டுமல்ல அனைவரும் அரசியலுக்கு வரலாம்” – சரத்குமார்