போட்டியின் போது ரசிகர்கள் தன்னுடைய விக்கெட்டை இழக்க சொல்வது குறித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடப்பாண்டின் ஐபிஎல் போட்டியானது லீக் சுற்றுகளுக்கு பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 3 போட்டிகளில் ஐபிஎல் கோப்பையை தட்டி செல்லப் போவது யார் என்று தெரிந்துவிடும்.
இதனிடையே நேற்று (மே 23) இரவு நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நேரடியாக இறுதிச்சுற்றுக்கு சென்றது சென்னை அணி.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சென்னை அணிக்காக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் ஜடேஜா நேற்றைய போட்டியின் போது 4 ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் upstox என்ற நிறுவனம் சார்பில் மிகவும் மதிப்புமிக்க வீரர் என்ற விருதும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
விருது மற்றும் காசோலை பெறும் போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜடேஜா, “அப்ஸ்டாக்ஸ்க்கு தெரிகிறது… சில ரசிகர்களுக்கு தெரியவில்லை” என்று சிரிப்பது போன்ற எமோஜியை குறிப்பிட்டிருந்தார்.
ஜடேஜாவின் பதிவு நகைச்சுவையாக தெரிந்தாலும், அவரது மன வலியை அது பிரதிபலிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. காரணம், ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை எந்த அணி விளையாடுகிறதோ, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள் பேட்ஸ்மேன் விக்கெட் இழக்காமல் ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டும் வீரர்கள் வேகமாக விக்கெட்டை இழக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி 7வது வீரராக தான் பேட்டிங்கிற்கு களமிறங்குவார். சென்னை அணியின் ஆட்டத்தை காண வருபவர்களை விட தோனியின் பேட்டிங்கை காண வருபவர்களே அதிகம் என்பதால் தான் மற்ற வீரர்கள் ஆட்டமிழக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதிலும் குறிப்பாக தோனிக்கு முன்னதாக 6வது வீரராக ஜடேஜா களமிறங்கும் போது ரசிகர்கள் கோரஸாக “we want dhoni” என்று கோஷமிடுவார்கள். மேலும் பலர் ஜடேஜாவை முதல் பந்திலேயே ஆட்டமிழக்க சொல்லி பதாகைகளுடன் மைதானத்தில் அமர்ந்திருப்பார்கள்.
இதனைக் குறிப்பிடும் விதமாக தான் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா நகைச்சுவையாக அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். ஜடேஜாவின் பதிவை கண்ட ட்விட்டர் பயனாளர்கள் பலரும் அவர்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
விபின் திவாரி என்ற பயனாளி, “இதனை படித்த பிறகு தான் ஜடேஜா ஏன் கர்மா பதிவை வெளியிட்டார் என்பது தெளிவாகிறது. உண்மையில் அது அவரை மதிக்காத ஒரு கூட்டத்திற்கானது. தோனி என்றென்றும் விளையாட முடியாது என்பதை ரசிகர்கள் மனதில் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் அணிக்கு பெரும் சொத்தாக இருக்கும் ஒரு வீரரை அவமதிப்பது எதிர்காலத்தில் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேவாஷிஷ் பால்கர் என்ற மற்றொரு பயனாளி, “ரவீந்திர ஜடேஜா 21ஆம் நூற்றாண்டில் சிறந்த இந்திய ஆல்ரவுண்டர் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு ஹர்திக் அல்லது விராட் போன்ற பிராண்ட் மதிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்தான் உண்மையான 3டி பிளேயர். இது தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் அவரை அதிகம் பார்க்க விரும்புகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர்”, “கவலைப் படாதீர்கள் சாம்பியன். உங்களது மதிப்பு எங்களுக்குத் தெரியும்” என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
விமர்சனம்: யாதும் ஊரே யாவரும் கேளிர்!
உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியானார் எஸ்.வைத்தியநாதன்