தூக்கத்தில் குறட்டை விடுவதால் சர்க்கரை நோய், தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இதய நோய் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் ப.விஜயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாம் சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. இந்த பாதையில் தடைகள் ஏற்பட்டால் திசுக்கள் அதிர்வுறுவதால் தான் குறட்டை ஏற்படுகிறது.
தூங்கும்போது நமது நாக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன.
அந்நேரத்தில், அந்த தளர்வடைந்த தசைகளின் வழியாக சுவாசக்காற்று செல்லும்போது சுவாசப்பாதை சுருங்கியிருப்பதால் திசுக்கள் அதிர்வுறுகின்றன.
இதனால், சுவாசப் பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை ஏற்படுகிறது.
குறட்டை விடுவதை ஒரு சாதாரண பிரச்சனையாக நினைத்தாலும், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியமானது.
குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும்போது மூச்சு அதிகமாக உள்ளிழுக்கப்படும் போது சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, தூக்கத் தடை பாதிப்புகளுக்கான இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ப.விஜயகிருஷ்ணன் கூறுகையில், “ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியம். தடையற்ற உறக்கத்தால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
பலர் தூக்கத்தில் விடும் குறட்டையைப் பெரிதாக நினைத்துக் கொள்வதில்லை. உண்மை என்னவென்றால், தூக்கத்தில் குறட்டை விடுவது, உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒன்றாகும்.
உடலின் அகச்சுரப்பிகள் முறையாகச் செயல்படுவதற்கும், உடல் உறுப்புகள் முறையாக இயங்குவதற்கும் ஆக்சிஜன் இன்றியமையாத ஒன்று.
சுவாசப் பாதையில் சதை வளர்ச்சி, தசைகள் தளர்வு, உடல் பருமன் போன்ற காரணங்களால் தூக்கத்தில் சரியாகச் சுவாசிக்க முடியாமல் போகிறது.
அதன் காரணமாகத்தான், தூக்கத்தில் குறட்டை ஏற்படுகிறது. அவ்வாறு சுவாசிக்க முடியாமல், அகச்சுரப்பிகளில் பாதிப்பு ஏற்படும் போதுதான், சர்க்கரை நோய், தைராய்டு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இதன்மூலம், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்பட வழி வகுக்கின்றன.
எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குறட்டை பாதிப்பை அலட்சியப்படுத்தாமல் உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
குறட்டை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையத்தில், இந்த மாதம் முழுவதும் பிற்பகல் 2 – 3 மணி வரை இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.