பியூட்டி டிப்ஸ்: அம்மைத் தழும்புகளை நீக்க ஆறு வழிகள்!
வெயில் காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானது, அம்மை. சில வாரங்களில் அம்மை சரியாகிவிட்டாலும், அதனால் உடலில் ஏற்பட்ட தழும்புகள் அப்படியேதான் இருக்கும். “இந்தத் தழும்புகளை இயற்கை முறையில் நீக்கிவிட முடியும்’’ என்கிற சரும மருத்துவர்கள். அதற்காக ஆறு வழிகளையும் சொல்கிறார்கள். Six Ways to Remove Chickenpox Scars
1. உடலில் அம்மைத் தழும்புகள் உள்ளவர்கள், கோடைக்காலத்தில் சருமத்தில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தழும்புகள் இருக்கும் பகுதிகளில் ஈரப்பதத்தை அதிகரிக்க தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், லிக்விட் பாரஃபின் (Liquid Paraffin) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். முகம், கை போன்ற பகுதிகளில் வெண்ணெயால் மசாஜ் செய்யலாம். செயற்கை மாய்ஸ்சரைசர்களைத் தவிர்க்கவும்.
2. சோற்றுக் கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன. இதைப் பயன்படுத்துவதால், சருமத்தில் ஈரப்பதம் அதிகரித்து, வடுக்கள் மறையும். கற்றாழையின் உள்பகுதியிலுள்ள ஜெல்லை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்தலாம். ஒரு நாளில் அதிகபட்சம் நான்கு தடவை இப்படிச் செய்யலாம். கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதைவிட, நேரடியாக கற்றாழையிலிருந்து எடுத்து, பயன்படுத்துவது மிகவும் நல்லது.
3. அம்மைநோய் பாதிப்பால் ஏற்பட்ட கொப்பளங்கள் குணமாகும்போது, அவற்றைச் சுற்றியிருக்கும் பகுதியில் எரிச்சலும் அரிப்பும் எடுக்கும். சொரியும்போது வடுக்கள் அதிகரிக்கும்.அரிப்பைத் தடுக்க, பேக்கிங் சோடாவைத் தண்ணீரில் கலந்து வடுக்களின் மீது தடவலாம். இது, சருமத்திலிருக்கும் இறந்த செல்களை நீக்கி, எரிச்சல் உணர்வைக் குறைக்கும்.
4. வைட்டமின் ஈ அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டால், வடுக்கள் இயற்கையாகவும் வேகமாகவும் மறையும். கீரை வகைகள், பச்சை நிறக் காய்கறிகள், பப்பாளி, நட்ஸ், அவகேடோ போன்றவற்றில் இவை அதிகமிருக்கும். ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் குணங்களும் நிறைந்திருப்பதால், வெடிப்புகள் ஏற்படாமல் தடுத்து சருமம் மிருதுவாக மாற உதவும்.
5. தினமும் இளநீர் குடித்தால், தழும்புகள் விரைவாக மாறும். இளநீரில் சருமத்துக்குத் தேவையான `சைட்டோகைன்ஸ்’ (Cytokines) நிறைந்திருப்பதால், ஈரப்பதம் குறையாமலிருக்கும். சரும வெடிப்புகளையும் தடுக்கும். வடு அதிகமாக இருக்கும் பகுதிகளில் இதை நேரடி மாய்ஸ்சரைசராகக்கூடப் பயன்படுத்தலாம்.
6. அம்மை நோய் பாதிப்பு சரியானதும், முதலில் சில தினங்கள் தினமும் ஐந்து முதல் பத்து நிமிடங்கள்வரை, மேலே குறிப்பிட்டுள்ள இயற்கையான ஏதேனும் ஒரு மாய்ஸ்சரைசரைக் கொண்டு மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அம்மை நீங்கி, ஏழு நாள்களுக்கும் மேல் வடு குறையாமலிருந்தால், தாமதிக்காமல் சரும மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் மோர் வற்றல்
’யாருகிட்ட என்ன கேக்குறீங்க ஆபிசர்?’ : அப்டேட் குமாரு
மகளிர் தினம் : 2024ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது யாருக்கு?