சிவகங்கை மாவட்டத்தில் திருமணமாகிச் செல்லும் தங்கைக்கு வீட்டின் வளர்ப்பு விலங்குகளை அண்ணன் பரிசாகக் கொடுத்துள்ளார்.
வீட்டில் இருக்கும் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது மணப்பெண்ணுக்குத் தாய் வீட்டில் சீர் வரிசை கொடுத்து அனுப்புவது வழக்கம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண்ணுக்கு வித்தியாசமான பரிசை கொடுத்துள்ளார் பெண்ணின் அண்ணன்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த சுரேஷ்-செல்வி தம்பதியரின் மகள் விரேஸ்மா. இவருக்கு நேற்று (டிசம்பர் 11) மானாமதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடந்தது.
அப்போது விரேஸ்மாவின் அண்ணன் ராயல் திருமணம் நடைபெறும் மேடைக்கு ஜல்லிக்கட்டு காளை, சண்டை சேவல், கன்னி நாய்கள் உடன் மேடைக்கு வந்துள்ளார்.

மேடைக்கு வந்து அவருடன் அழைத்து வந்த விலங்குகளை விரேஸ்மா மற்றும் அவரது கணவரிடம் சீர்வரிசையாகக் கொடுத்துள்ளார். இதனை சிறிதும் எதிர்பார்க்காத விரேஸ்மா ஆச்சரியமடைந்துள்ளார்.
சீர்வரிசையாகக் கொடுக்கப்பட்ட விலங்குகள் அனைத்தும் விரேஸ்மா சிறு வயதில் இருந்து வளர்த்து வந்தவை. எனவே திருமணத்திற்குப் பிறகு அவற்றைப் பிரிய மனமில்லை என்று தன் அண்ணனிடம் கூறியுள்ளார்.

இதனால் தங்கையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக விரேஸ்மாவின் அண்ணன் இவ்வாறு செய்துள்ளார்.
திருமணத்திற்கு வருகை தந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இவர்களது பாசத்தைக் கண்டும், தங்கை திருமணத்திற்கு அண்ணன் கொடுத்த பரிசை கண்டும் நெகிழ்ந்தனர்.
தற்போது இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கன அடி நீர் திறப்பு!
நள்ளிரவில் மெரினாவில் நடந்த சேஸிங்