முட்டி வலி என்பது தற்போது பெரும்பாலானோரும் சந்திக்கும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, உடல் பருமனால் உண்டாகும் முட்டி வலியால் பாதிக்கப்படுபவர்கள் நம்மில் பலருண்டு.
இந்த நிலையில் உடற்பருமனைக் குறைப்பதற்காக வாக்கிங் சென்றால் முட்டி வலி அதிகமாகிறதே என்பது முட்டி வலியால் பாதிக்கப்படும் சிலரின் புகாராக உள்ளது.
அப்படியென்றால், எப்படித்தான் உடற்பருமனைக் குறைப்பது, முட்டி வலியிலிருந்து தப்பிப்பது என்று கேட்பவர்களுக்காக எளிய தீர்வுகளைச் சொல்கிறார்கள் எலும்பு முறிவு மருத்துவர்கள்.
“அதிக உடல் எடை உள்ளவர்கள் சைக்கிளிங் செய்யலாம். சைக்கிளிங் செய்யும்போது உடலின் மொத்த எடையும் சைக்கிள் சீட்டில் குவிந்துவிடும். முட்டியின்மேல் எடை விழாது. எனவே, முட்டி வலி இருப்பவர்களுக்கு சைக்கிளிங் ஒரு சிறந்த உடற்பயிற்சியாக அமையும்.
அதேபோல, நீச்சலும் உடற்பருமன் உள்ளவர்களுக்கு சிறந்ததொரு பயிற்சியாக அமையும். நீச்சல் பயிற்சி செய்யும்போதும் உங்கள் உடலின் ஒட்டுமொத்த எடையானது முட்டியில் சேராது. அதனால் முட்டி வலி மற்றும் முட்டி தேய்மானம் அதிகமாவது போன்றவற்றைத் தவிர்க்க முடியும்.
ஆக, முட்டி வலி இருந்து, உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சைக்கிளிங், நீச்சல் ஆகிய இரண்டும் பரிந்துரைக்கத்தக்கவை.
பொதுவாகவே, நம் உடலின் தசைகளுக்கென்று ஒரு வலிமை இருக்கிறது. அந்த வலிமைக்கு என்ன முடியுமோ அந்த அளவு உடல் எடையை மட்டுமே நம் தசைகளால் தூக்க முடியும்.
ஆனால், உடல் எடை அதிகமாகும்போது ஒட்டுமொத்த எடையையும் தாங்கிக்கொண்டு தசைநார் இயங்க வேண்டும், நடக்க வேண்டும், மாடிப்படி ஏற வேண்டும்.
இது தசைநாருக்கு நாம் கொடுக்கும் அதிகப்படியான வேலைகள். இதனாலேயே, உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் நடக்கும்போது மூட்டுகளில் வலி உண்டாகிறது.
எனவே, உடற்பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கு நடக்கும்போது வலி வராமல் இருக்க வேண்டுமென்றால் தசைநார்களை வலுப்படுத்தும் (Muscle strengthening) பயிற்சிகள் செய்து, தொடை தசைகளை வலுவூட்ட வேண்டும். இப்படிச் செய்தால் முட்டி வலி குறையும்.
முட்டி வலியைக் குறைப்பதற்கு மாத்திரைகள், மருந்துகள், தைலம் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றைப் பயன்படுத்தும்போது சில மணி நேரத்துக்கு வலி இல்லாமல் இருக்குமே தவிர, மீண்டும் வலி வந்துவிடும். அதுமட்டுமல்லாமல், வலி நிவாரணி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது அது சிறுநீரகங்களையும் பாதிக்கத் தொடங்கிவிடும். எனவே, தற்காலிகமாக வலியைப் போக்கும் முயற்சியில் ஈடுபடாமல், வலி ஏன் வருகிறது என்பதைப் கண்டறிந்து, அதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கினால்தான் வலி நிரந்தரமாக மறையும்” என்று பரிந்துரைக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: தமிழ்ப் புதல்வன் திட்டம் துவக்கம் முதல் ‘அந்தகன்’ ரிலீஸ் வரை!
பியூட்டி டிப்ஸ்: தோற்றத்தை மாற்றும் வெண் புள்ளிகள்… தடுப்பது எப்படி?
கிச்சன் கீர்த்தனா: லைம் ரோஸ்ட் சிக்கன்
இங்க மட்டும் கூட மாட்டேங்குது : அப்டேட் குமாரு