பலரும் விடுபட நினைக்கும் சருமப் பிரச்னைகளில் ஒன்று, கழுத்துக் கருமை. Simple methods to get rid of dark neck
பார்லர் ட்ரீட்மென்ட் முதல் டெர்மட்டாலஜி ட்ரீட்மென்ட் வரை இதை சரிசெய்ய பல வழிகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி, கழுத்துக் கருமையில் இருந்து விடுபடலாம்.
ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைந்தது கற்றாழை. இது கழுத்தில் உள்ள கருமையை அகற்றி, இறந்த செல்களை நீக்கி, சருமத்தை மென்மையாக்கும்.
கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து, கழுத்தைச் சுற்றி அப்ளை செய்து, மென்மையாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு, பின் குளிர்ந்த தண்ணீரால் கழுவவும்.
குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் இதை தொடர்ந்து செய்துவர, கருமை படிப்படியாகக் குறைந்து மறையும்.
சருமத்தை சுத்தமாக்க உதவும் சிறந்த க்ளென்சர் பால். காய்ச்சாத பச்சை பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்து, பஞ்சால் அதைத் தொட்டு, கழுத்தைச் சுற்றி நன்கு துடைத்து எடுக்கவும்.
அழுக்கும், இறந்த செல்களும் நீங்கும். பின்பு 20 – 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து கழுவவும். இதை தினமும் அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை செய்து வர, கருமை நீங்கி சருமம் தூய்மையாக இருக்கும்.
தயிர், எலுமிச்சைச் சாறு மற்றும் கடலை மாவை தேவையான அளவு எடுத்துக் கலந்துகொள்ளவும். இந்த பேஸ்ட்டை கழுத்தில் கருமை இருக்கும் பகுதியில் தடவி 30 நிமிடங்களுக்குப் பின் கழுவவும். இதை அடிக்கடி செய்துவர, கருமை படிப்படியாக நீங்கும்.
இறந்த சரும செல்கள் மற்றும் சருமத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்ற பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்.
இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து, கழுத்துப் பகுதியில் தடவி சில நிமிடங்கள் வைத்திருக்கவும். காய்ந்ததும் ஈரத் துணியால் துடைத்து, பின்னர் கழுவவும். சென்சிட்டிவ் சருமம் இருப்பவர்கள் இந்த செயல்முறையை தவிர்க்கவும்.
உருளைக்கிழங்கு சிறந்த பிளீச்சிங் பண்பு உடையது. அழுக்கு, கருமை நீக்கி சருமத்தை சுத்தமாக்கும். சருமத்தின் நிறத்தை சீராக மாற்றும்.
கரும்புள்ளிகள் நீக்கவும் இதை பயன்படுத்தலாம். ஒரு சிறிய உருளைக்கிழங்கை மையாக அரைத்து, சாற்றை எடுக்கவும். அதை பஞ்சால் தொட்டு, கழுத்து பகுதியில் அழுந்தத் துடைக்கவும். காய்ந்ததும் கழுவவும்.
முக்கியமாக சரிவிகித உணவை பின்பற்ற வேண்டும். காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவை சருமத்துக்கு ஊட்டமும் பொலிவும் கொடுக்கும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகளைத் தவிர்த்தல் அவசியம். அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும், நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். Simple methods to get rid of dark neck
சிலருக்கு, கழுத்தில் ஏற்படும் கருமை ஹார்மோன் பிரச்சினையாலும் ஏற்படலாம் என்பதால், அதற்கான வாய்ப்பிருப்பவர்கள் இதை சருமப் பிரச்சினையாக சுருக்கிப் பார்க்காமல், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணி!
ஹெல்த் டிப்ஸ் : உங்கள் உடம்பில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதா?