இசைக்கு எல்லைகள் கிடையாது என்பார்கள். ஒரு நாட்டில் உருவாக்கப்படும் பாடலை உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மக்கள் கொண்டாடி வருவார்கள்.
மேலும் இசையானது பல்வேறு கலாச்சாரங்கள் சமூக பின்புலங்கள் கொண்ட மக்களை ஒன்றிணைக்கும் கருவியாகவும் இருக்கிறது.
இந்நிலையில் மறைந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலாவின் ஒரு பாடலுக்கு இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஒன்றாக ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சித்து மூஸ்வாலா சுட்டுக் கொலை!
பஞ்சாபை சேர்ந்த சித்து மூஸ் வாலா மிகவும் பிரபலமான பாடகர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சித்து பாடகராக உச்சம் தொட்ட நாளில் இருந்து அவருக்கு பணம் பறிக்கும் பல கும்பல்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தன.

கடந்த மே மாதம் 29ஆம் தேதி சித்து மூஸ் வாலா காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.
அவர் உடலில் இருந்து 25 புல்லட்டுகள் எடுக்கப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கொலையாளிகளை தீவிரமாக தேடிய போலீசார், நால்வரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இசையால் இணைந்த இரு நாட்டு வீரர்கள்!
இந்நிலையில் தங்கள் நாட்டு எல்லையில் இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், மறைந்த சித்து மூஸ்வாலாவின் ‘பாம்பிஹா போலே’ பாடலை ஸ்பீக்கரில் போட்டு கேட்டுள்ளனர்.
இதனை மறுபுறத்தில் இருந்து கேட்ட இந்திய ராணுவ வீரர்கள், அந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களும் நடனமாடுகின்றனர்.
இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ஹெச்ஜிஎஸ் தலிவால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில், “”எல்லை தாண்டியும் சித்துவின் பாடல்கள் ஒலிக்கின்றன! வேறுபாடுகளை குறைக்கின்றன! என்று பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து தற்போது பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு இருநாட்டு ஒற்றுமையையும், பாடகர் சித்து மூஸ் வாலாவின் திறமையையும் பதிவிட்டு வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
தீவிரவாதிகள் தாக்குதல் : 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்!