பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர்.
இதனையடுத்து மாலிக் தனது முன்னாள் மனைவியான ஆயிஷா சித்திக்கிடம் இருந்து பிரிந்து வந்து, சானியா மிர்சாவை கடந்த 2010 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் கடந்த அக்டோபர் 30, 2018 அன்று ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இஷான் மிர்சா மாலிக் என்று பெயரிட்டனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஊடகங்கள், இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்து வாழ்கின்றனர் என்றும், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளனர் என்றும் செய்திகள் வெளியிட்டன.
இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சோயிப் மாலிக்கிடம், சானியா மிர்சாவுடனான விவாகரத்து மற்றும் ரம்ஜான் கொண்டாட்டங்களில் சானியா இல்லாதது ஆகியவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பதில் அளித்த சோயிப், “எனக்கும் சானியாவுக்கும் இடையேயான உறவு குறித்து சில மாதங்களாக வதந்தி பரவியது.. அதில் சிறிதும் உண்மையில்லை. இந்த ரம்ஜான் பெருநாளை சானியாவுடன் தான் கொண்டாட விரும்பினேன், ஆனால் அவரால் அந்த நிகழ்சிகளில் பங்கேற்க முடியவில்லை.
ஐ.பி. எல் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளை சானியா தொகுத்து வழங்கி வருகிறார். அதனால் அவரால் பண்டிகையில் கலந்து கொள்ள முடியவில்லை.
நாங்கள் எப்போதும் போல அன்பாகவே இருக்கிறோம். சானியாவை மிகவும் மிஸ் செய்கிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான் என்னால் கூறமுடியும்” என தெரிவித்தார்.
சோயிப்பின் கருத்துக்குப் பிறகு இந்த தம்பதிகளின் விவாகரத்து தொடர்பான வதந்திகளுக்கு சற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இச்சூழலில் தான் , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சானியா மிர்சா குறித்த தகவல்களை நேற்று (ஆகஸ்ட் 4) நீக்கியுள்ளார் சோயிப் மாலிக்.
அதாவது மிகச்சிறந்த பெண்மணியான சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கியுள்ளார். தற்போது இந்த தம்பதிகள் குறித்தான விவாதங்கள் மீண்டும் சமூகவலைதள பக்கங்களில் தொடங்கியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“அடுத்து அமைச்சர் மூர்த்தி தான்” – அண்ணாமலை
”நானும் டெல்டா காரன் என்று சொல்லும் ஸ்டாலின்”- கொதித்த அன்புமணி