நீடா அம்பானியின் கலாச்சார மையம் துவக்க விழாவையொட்டி வெளியான ஷாருக்கானின் புகைப்படம் அவரது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் தொன்மையான பண்பாட்டை விளக்கும் வகையில், ‘நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்’ தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு இனக்குழுக்களின் பாரம்பரிய கலைகளை உலக அரங்கில் எடுத்துச்செல்லும் விதமாக இந்த கலாச்சார மையம் செயல்படும் என்று நீடா அம்பானி அறிவித்துள்ளார்.
இதில் 2000 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கம், ஸ்டுடியோ, போன்றவை இடம்பெற்றுள்ளன.
மும்பையில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள கலாச்சார மையத்தின் தொடக்க விழா நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், சல்மான் கான், அமீர்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஷ்ரத்தா கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பாலிவுட் பாட்ஷாவான நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்ட புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை. ஆனால் அவரது மேலாளர் பூஜா தத்லானி தனது ட்விட்டர் பக்கத்தில், ஷாருக்கான் ஒரு கறுப்பு நிற கோட்டில் ஸ்டைலாக நிற்பது போன்ற புகைப்படங்களை பதிவிட்டார்.
அதனை பார்த்த பலரும் அவரது மகன் ஆர்யன் கான் என்று தவறாக நினைத்து அவரை டேக் செய்து பாராட்டி வந்தனர்.
ஆனால் உண்மையை அறிந்த அவரது ரசிகர்கள், ஷாருக்கானா இது? அவர் மகன் மாதிரியே இவ்வளவு இளமையுடன் இருக்கிறாரே என்று புகழ்ந்து வருகின்றனர்.
அதேவேளையில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான், மகள் சுஹானா கான் மற்றும் மகன் ஆர்யன் கான் ஆகியோர் சல்மான்கானுடன் சேர்ந்து நின்று எடுத்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா