ஹெல்த் டிப்ஸ்: கர்ப்ப காலம் முழுவதும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாமா?

Published On:

| By Selvam

கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாமா… எந்த மாதங்கள் அதற்குப் பாதுகாப்பானவை… கர்ப்பமாக இருக்கும்போது தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் சுகப்பிரசவம் நடக்கும் என்று சொல்லப்படுவது உண்மையா… என்கிற சந்தேகங்களுக்கு மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். Sex during pregnancy is Safe?

“கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ப்ளீடிங் பிரச்சினை போன்ற எதுவும் இல்லை என்றால், பாதுகாப்பான முறையில் தாம்பத்திய உறவில் ஈடுபடலாம். அதனால் எந்தப் பிரச்சினையும் வராது.

ஆனால், கர்ப்பத்தின்போது செய்து பார்த்த ஸ்கேனில், குழந்தையின் நஞ்சு கீழே இருப்பதாகவோ, கட்டிகள் ஏதும் இருப்பதாகவோ, வேறு பிரச்சினைகள் இருப்பதாகவோ குறிப்பிட்டிருந்தால் கர்ப்பகாலத்தின் போது தாம்பத்திய உறவைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது.

இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கும் நிலையில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் ப்ளீடிங் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதே காரணம். பிரச்சினைகள் ஏதுமில்லை என்ற பட்சத்தில் கர்ப்பத்தின்போது தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள  5 முதல் 7-ம் மாதங்கள் பாதுகாப்பானவை.

கர்ப்பகாலம் முழுவதும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் சுகப்பிரசவம் நிகழுமாமே என்ற கேள்வியும் நிறைய பெண்களிடம் இருப்பதைப் பார்க்கிறோம்.

தாம்பத்திய உறவின்போது வெளிப்படும் விந்தணுக்களில் புராஸ்டாகிளாண்டின் எனப்படும் ரசாயனம் இருக்கும். இந்த ரசாயனமானது, கர்ப்பப்பைத் தசைகளை இறுக்கித் தளர்த்த ஆரம்பிக்கும். அந்த வகையில் கர்ப்பத்தின் 9-வது மாதத்துக்குப் பிறகு தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதன் மூலம், புராஸ்டாகிளாண்டின் சுரப்பானது, கர்ப்பப்பைத் தசைகளைச் சுருக்கித் தளர்த்துவதால், சுகப்பிரசவம் நிகழும் வாய்ப்புகள் சற்று அதிகரிக்கும்.

இது பொதுவான அறிவுரைதான். மற்றபடி, உங்களுடைய கர்ப்பத்தின் தன்மை, அதில் உள்ள பிரச்சினை, ரிஸ்க் போன்றவற்றைப் பொறுத்து, உங்கள் மருத்துவர் இந்த விஷயத்தில் அறிவுறுத்தும் விஷயங்களைப் பின்பற்றுவதுதான் சரியானது.

சுகப்பிரசவத்துக்கு உதவும் என்ற ஒற்றை வரியை மட்டும் நம்பிக்கொண்டு, கர்ப்பத்தில் பிரச்சினைகள் உள்ள நிலையில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது ஆபத்தில் முடியலாம்” என்று எச்சரிக்கிறார்கள். Sex during pregnancy is Safe?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share