உங்கள் ஊழியர்களை அனுப்பி வையுங்கள்: கலெக்டருக்கு கடிதம் எழுதிய விவசாயி

Published On:

| By Monisha

கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டம் நடைபெறுவதால் விவசாயம் செய்யும் பருவத்தில் வேலை ஆட்கள் இல்லாமல் தவிப்பதால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உபரி ஊழியர்களை விவசாய வேலைக்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு விவசாயி ஒருவர் அனுப்பிய கடிதம் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா நெல்கட்டும்செவல் அருகில் உள்ளது பாறைப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘எனது கிராமத்தில் நான் 4 ஏக்கர் நில பரப்பில் விவசாயம் செய்து வருகிறேன். பிப்ரவரி முதல் ஜூன் வரையில் கோடைக்கால பருவத்திலும் செப்டம்பர்-ஜனவரி வரையில் மழை கால பருவத்திலும் விவசாயம் செய்து வருகிறோம்.

இந்த 2 பருவத்திலும் பயிரின் வயதுக்கு ஏற்ப முதல் 50 நாட்கள் வரையில் களை எடுப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிக்காக அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கடைசி 30 நாட்கள் அறுவடை பணிக்கும் கூலி ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்த காலகட்டங்களில் 100 நாள் வேலைக்கு கிராம மக்கள் அனைவரும் சென்று விடுகின்றனர். இதனால் பயிர்களுக்கு களை எடுக்க ஆள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம்.

அப்படியே ஆட்கள் கிடைத்தாலும் 100 நாள் வேலை காரணமாக 7 மணி நேர வேலை என்பது 4 மணி நேரமாக சுருங்கி போய்விட்டது. இதனால் பயிர் பராமரிப்பு செலவு அதிகமாகி விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறோம்.

தற்போது நான் 3 ஏக்கரில் பருத்தி பயிரிட்டுள்ளேன். எங்கள் பகுதியில் தற்போது 100 நாள் வேலைத் திட்ட பணிகள் நடைபெறுவதால் களை எடுக்க ஆட்கள் கிடைக்கவில்லை.

எனவே கலெக்டர் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் இருந்தால் அவர்களை களை எடுக்க அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அவர்களுக்கு கூலி, பஞ்சப்படி, பயணப்படி, மதிய உணவு என அனைத்தையும் கொடுக்க தயாராக உள்ளேன்’ என்று விவசாயி மகேஸ்வரன் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

என் அண்ணனிடம் கற்றுக்கொள்ளுங்கள்: பிரதமருக்கு பிரியங்கா காந்தி அட்வைஸ்!

அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel