டெல்லியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவரும், தலைமைச் செயலதிகாரியுமான சத்ய நாதெள்ளா இன்று(ஜனவரி 5) பிரதமர் மோடியை சந்தித்து உரையாடியுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான சத்ய நாதெள்ளா (53) நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான நாதெள்ளா பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மூன்றாம் நாளான இன்று பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள், மேம்பாட்டாளர்கள், மாணவர்கள், அரசுத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களைச் சந்தித்து உரையாடினார்.
நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்த சத்ய நாதெள்ளா, இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும், தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து சத்ய நாதெள்ளா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த சந்திப்புக்காக பிரதமர் மோடிக்கு நன்றி. டிஜிட்டல் மாற்றத்தால் இந்தியப் பொருளாதாரத்தில் காணப்படும் நிலையான மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அரசின் ஆழ்ந்த ஈடுபாட்டை பார்க்கும்போது மிகவும் நெகிழ்வாக உள்ளது. டிஜிட்டல் பயணத்தில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களை சந்தித்தது மகிழ்ச்சி சத்ய நாதெள்ளா. தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் முன்னேற்றங்கள் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி வருகிறது. புவியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திறனும், சிந்தனையும் நமது இளைஞர்களிடம் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா