சமோசா விற்பனை மூலம் ஆண்டுக்கு 45 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வரும் பெங்களுரைச் சேர்ந்த ஒரு ’சிங்’ தம்பதியினர் தொழில்முனைவோராய் ஜோடியாக வெற்றிநடை போட்டு வருவது பலரையும் அவர்களை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்தியாவில் அனைவராலும் விரும்பப்படும் சிற்றுண்டிகளில் ஒன்று சமோசா. டீக்கடை முதல் 5 ஸ்டார் ஹோட்டல்கள் வரை விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த சூடுபறக்கும் சமோசா, படித்த ஒரு தம்பதியின் சம்பள வேலையை தூக்கி எறிய செய்துள்ளது. அவர்களை இளம் தொழில்முனைவோராக்கி இன்று ஆண்டுக்கு ரூ.45 கோடி வரை சம்பாதிக்க வைத்துள்ளது.
ஹரியானாவில் உள்ள பிரபல கல்லூரியில் பயோடெக்னாலஜியில் பி-டெக் படிக்கும் போது ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் இடையே காதல் மலர்ந்துள்ளது. படிப்பை முடித்ததும் ஷிகர் பயோகான் நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். அதுபோலவே நிதி சிங்கும் குருகிராமில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் ரூ.30 லட்சம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து காதலித்து வந்த இந்த ஜோடி, வேலையில் சேர்ந்ததும், இருவீட்டார் சம்மத்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
சமோசாவுக்காக அழுத சிறுவன்
ஷிகருக்கு படிக்கும் போதே ’சமோசா’ பிசினஸ் ஐடியா இருந்தது. ஆனால் நிதி அவரை விஞ்ஞானி ஆகும்படி அறிவுறுத்தியதால் காதலிக்காக தனது ஆசையை கைவிட்டார்.
ஆனால் கைநிறைய சம்பாதிக்கும் ஒரு வேலையில் சேர்ந்து, பின்னர் இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், ஒருநாள் சாலையில் சமோசாவுக்காக சிறுவன் அழுவதைப் பார்த்துள்ளனர். அப்போது ஷிகர் தனது கல்லூரி காலத்தில் கைவிட்ட சமோசா பிசினஸை தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கு நிதி சிங்கும் அனுமதி அளித்தார்.
பின்னர் இருவரும் கடந்த 2015ம் ஆண்டு தங்களது வேலையை உதறிவிட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூரில் ‘சமோசா சிங்’ என்ற ஒரு சிற்றுண்டி உணவகத்தைத் தொடங்கினர். ஐடி நிறுவனங்கள் நிரம்பி வழியும் சிலிக்கான் ஆஃப் வேலி என்றழைக்கபடும் பெங்களூரில் உணவகம் தொடங்குவதற்கு நிறைய செலவாகும். அதற்காக தாங்கள் குடியேற ஆசைப்பட்ட 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட் வீட்டை, வாங்கிய சில நாட்களிலேயே விற்றுள்ளார்கள்.
இப்படி தங்களது அனைத்து ஆசைகளையும், வசதிகளையும் துறந்து, சமோசா விற்க தொடங்கிய இந்த சிங் தம்பதியினர், தற்போது நாடு முழுவதும் 40 கடைகளை திறந்துள்ளனர்.
விதவிதமான வெரைட்டி சமோசா
மேலும் கடாய் பன்னீர் சமோசா, பட்டர் சிக்கன் சமோசா, சாக்லேட் சமோசா என்று ஒரு நாளைக்கு சுமார் 30,000 சமோசாக்களை சுட்டு தங்களது சமோசா சிங்கின் சாம்ராஜ்யத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தியுள்ளனர்.
இதனால் ரூ.80 லட்சம் முதலீடுடன் தொடங்கிய அவர்களது சமோசா சிங், இன்று நாள் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.45 கோடி வருமானம் ஈட்டும் தொழிலாக உயர்ந்துள்ளது.
ஆசைப்பட்ட நமது கனவுக்காக தன்னம்பிக்கையுடன் ஈடுபாட்டு காட்டி உழைத்தால், நிச்சயம் வெற்றிபெறலாம் என்பதற்கு நவீன அடையாளமாக இன்றைய சமூகவலைதளத்தில் சரித்திரமாய் இடம்பெற்று பலரையும் ஈர்த்து வருகின்றனர் இந்த ’சமோசா சிங்’ தம்பதியினர்.
கிறிஸ்டோபர் ஜெமா
கல்வீச்சு தாக்குதல் : திமுகவில் இருந்து 4 நிர்வாகிகள் நீக்கம்!
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் ரெய்டு!