விபத்தில் சிக்கிய டாடா ஏஸ் – சிதறிய ரூ.7 கோடி – வீடியோ வைரல்!

Published On:

| By Kavi

ஆந்திராவில் விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்து 7 கோடி ரூபாய் ரொக்கத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மே 13ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அங்கு ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் செல்லக் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (மே 11) ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி டாடா ஏஸ் எனப்படும் குட்டி யானை ஒன்று சென்றுகொண்டிருந்தது.

ஆனந்தபள்ளி பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டாடா ஏஸ் கவிழ்ந்து, அதை இயக்கி வந்த ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது.

அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் போது லாரியில் இருந்து 7 கார்டுபோர்டு பெட்டிகள் கீழே விழுந்து சிதறி கிடந்தது.

அந்த பெட்டிகளில் பணம் இருக்கலாம் என்று சந்தேகித்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த பெட்டிகளை சோதனை செய்ததில் கட்டுகட்டாக பணம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதை கைப்பற்றிய போலீசார், எண்ணிப்பார்த்தபோது 7 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்துள்ளது.

இது யாருடைய பணம் என்பது இதுவரை தெரியவரவில்லை. இதுகுறித்து ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 9ஆம் தேதி என்.டி.ஆர் மாவட்டத்தில் 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று விபத்து நடந்த லாரியில் இருந்து 7 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் ஒருசில தினங்களே இருக்கும் நிலையில் கோடி கோடியாய் பணம் சிக்குவது ஆந்திர அரசியலில்  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பத்மபூஷன் விருதுடன் சென்னை வந்த பிரேமலதா… ரோடு ஷோவுக்கு தடை…அதகளமான ஏர்போர்ட்!

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய ‘ஸ்டார்’: முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share