தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக வாடகை திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது பிரபல பைக் நிறுவனமான ராயல் என் ஃபீல்டு நிறுவனம்.
நம் நாட்டில் ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்திய காலம் முதல் இன்றுவரை பைக் பிரியர்களின் விருப்பத்திற்குரிய பிராண்டாகவே மார்க்கெட்டில் வலம் வருகிறது.
1901ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நூறாண்டுகளை கடந்த போதும், சந்தை நிலவரம், வாடிக்கையாளர்களின் விருப்பம் ஆகியவற்றிற்கேற்ப அதிநவீன வசதிகள் கொண்ட பல்வேறு ரக பைக்குகளை தயாரித்து நம்பர் 1 நிறுவனமாக உள்ளது.
டுபு டுபு சவுண்டில் கெத்தாக நிமிர்ந்து அமர்ந்தபடி ராயல் என்ஃபீல்டில் பயணிக்க வேண்டும் என்பது இன்றும் கோடிக்கணக்கான பைக் பிரியர்களின் ஆசையாக உள்ளது.
ஆனால் மார்க்கெட்டில் லட்சங்களில் விற்கும் அந்த பைக்கை வாங்க முடியாதவர்கள் அந்த பைக்கை ஏக்கத்துடன் பார்ப்பது ஒரு குறையாக இருந்து வந்தது.
25 நகரங்களில் வாடகைக்கு கிடைக்கும்!
இந்நிலையில் ’ராயல் என்ஃபீல்டு ரெண்டல்’ என்ற பெயரில் இந்தியாவில் பைக்குகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இந்தியாவில் உள்ள 25 நகரங்களில் 40க்கும் மேற்பட்ட பைக் வாடகை ஆபரேட்டர்கள் மூலம் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் வாடகைக்கு வழங்கப்படும். இதற்காக வாடகை திட்டத்தில் மொத்தம் 300க்கும் மேற்பட்ட பைக்குகள் பயன்படுத்தபட உள்ளன.
அகமதாபாத், மும்பை, குஜராத், மகாராஷ்டிரா, சண்டிகர், தர்மஷாலா, லே, மணாலி, ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் ராயல் என்ஃபீல்டு வாடகைக்கு கிடைக்கும்.
இந்த நகரங்களைத் தவிர, ராயல் என்ஃபீல்டு உற்பத்தி செய்யப்படும் சென்னை, உதய்பூர், ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், கோவா, கொச்சி, புவனேஸ்வர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சிம்லா, நைனிடால், பிர் பில்லிங், சிலிகுரி மற்றும் டேராடூன் ஆகிய இடங்களிலும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் வாடகைக்கு கிடைக்கும்.
இதில் மேலும் பல நகரங்களை இந்த பட்டியலில் சேர்க்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எப்படி வாடகைக்கு பெறுவது?
ராயல் என்ஃபீல்டு பைக்கை ஒருவர் வாடகைக்கு எடுக்க, முதலில் ராயல் என்ஃபீல்டு ரெண்டலின் https://www.royalenfield.com/in/en/rentals/ இணையதளத்திற்குச் சென்று, பைக் தேவைப்படும் நகரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இது முடிந்ததும், பிக்-அப் நேரம் மற்றும் தேதி மற்றும் டிராப் நேரம் மற்றும் தேதி ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.
இத்தகவல்களின் அடிப்படையில் திரையில் ராயல் என்ஃபீல்டு ரக மாதிரிகள் மற்றும் அவற்றின் விலைகள் அடங்கிய பட்டியல் காண்பிக்கப்படும்.
அதனை தேர்ந்தெடுத்தப்பின் தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து லாக் இன் செய்தால் பைக் ஆபரேட்டரின் விவரங்களைப் பெறலாம்.
அதன் பின்னர் குறிப்பிட்ட தொகையுடன் டெபாசிட் தொகையும் செலுத்தினால், ராயல் ரைடுக்கு நீங்கள் ரெடி!
அதெல்லாம் சரி… வாடகைக்கு எடுத்த பின் பைக்கை வாரிக்கொண்டு போக முயற்சித்தாலோ, குறிப்பிட்ட காலம் தாண்டி பைக்கை திருப்பி ஒப்படைக்காமல் ’காக்கை சிறகினிலே’ வடிவேலு பாணியில் சுற்றினாலோ என்ன செய்வார்கள்? என்று சிலர் கேட்கலாம்.
அதற்கு ‘இந்த தொழில்நுட்ப உலகில் சட்டப்படி நடவடிக்கை தான்’ என்று தெரிவித்துள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்!
கிறிஸ்டோபர் ஜெமா
ஒரே போட்டி… மீண்டும் சிம்மாசனத்தில் அமர்ந்த சிராஜ்
மீண்டும் வெளியாகும் கமலின் ‘நாயகன்’!